| ADDED : ஜூலை 21, 2024 12:27 AM
பல்லடம்;பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் மணிக்குமார் கூறியதாவது:திருப்பூர் பனியன் தொழில் சார்ந்து தென் மாவட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர். இவர்கள், தினசரி வேலைக்கு செல்வது மற்றும் வார விடுமுறை, பண்டிகை தினங்களில் சொந்த ஊர் செல்வதானாலும், கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. புறநகர் பகுதிகளில் வசிக்கும் இது போன்ற தொழிலாளர்கள், பணிக்குச் செல்லவும், சொந்த ஊர் செல்லவும், அரசு பஸ்களையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.பல்லடத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழித்தடத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள், பொதுமக்கள் வசதிக்காக குறிப்பிட்ட சில பஸ் ஸ்டாப்களில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இது தொடர்பாக அரசாணை இருந்தும் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில் சுணக்கம் காட்டி வருகின்றன.இதனால், பயணிகள் தேவையற்ற அலைக்கழிப்பு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அரசாணை இருந்தும் அரசு பஸ்கள் அதை மீறுவதை போக்குவரத்து கழகம் கண்டிக்க வேண்டும். முக்கியமான பஸ் ஸ்டாப்களில், பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல போக்கு வரத்து கழகம் அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனருக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.