உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உற்சாகம் இழந்த தொண்டர்கள்

உற்சாகம் இழந்த தொண்டர்கள்

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், தொடர்ந்து தேர்தல்களில் அ.தி.மு.க., தோல்விகளைச் சந்தித்து வருகிறது; இதனால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.திருப்பூர் லோக்சபா தொகுதி, 2009ல் முதன்முதலாக தேர்தலை சந்தித்தது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சிவசாமி அபார வெற்றி பெற்றார். அடுத்ததாக, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது.திருப்பூர் மாவட்டத்தில் இருந்த, எட்டு சட்டசபை தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற ஆனந்தன் அமைச்சரானார். அதை தொடர்ந்து, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், தனித்து களமிறங்கிய அ.தி.மு.க., 37 தொகுதிகளை வென்றது.உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல் என, அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க.,வின் கரம் ஓங்கியிருந்தது. அதன்தொடர்ச்சியாக, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.ஜெ., மறைவுக்கு பிறகு, பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார்; பிறகு, பழனிசாமி முதல்வரானார். கட்சி நலன்கருதி, இரட்டை தலைமையை ஏற்படுத்தி, கட்சி மற்றும் ஆட்சியில் மாற்றம் செய்யப்பட்டது.

தொகுதி பறிபோனது

அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது நடந்த, 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது; திருப்பூரில் எதிர்பாராத தோல்வியடைந்தது. தொகுதியை, இந்திய கம்யூ., கைப்பற்றியது. அடுத்து வந்த 2021 சட்டசபை தேர்தலும், தாராபுரம், காங்கயம், திருப்பூர் தெற்கு தொகுதிகளில் தோல்வியடைந்தது.கடந்த 2021 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், தோல்வியை சந்தித்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டது. இதனால் மாவட்ட கட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

ஒதுங்கிய 'மாஜி'க்கள்

லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே, வேட்பாளராக விருப்பமின்றி பலரும் ஒதுங்கினர். 'மாஜி'க்கள் ஒதுங்கியதால், புதிய வேட்பாளரை கண்டறிய கட்சி முடிவு செய்தது.நிறைவாக, பழனிசாமி மூலமாகவே, பெருந்துறையை சேர்ந்த அருணாச்சலம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயக்குமார், விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் என, ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த, நிர்வாகிகள் பாடுபட்டனர்.மின் கட்டண உயர்வு உட்பட பல்வேறு சவால்கள் இருந்ததால், அ.தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், பா.ஜ., அணியில், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் வேட்பாளராக களமிறங்கப்பட்டார். கடந்த தேர்தல்களை காட்டிலும், பா.ஜ., கூட்டணி, அதிகப்படியான ஓட்டுகளை பெற்றுள்ளது. இதனால் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், எளிதாக வெற்றிக்கனியை பறித்துள்ளார்.

நான்காவது தோல்வி

திருப்பூர் அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இது, நான்காவது தோல்வி. கடந்த, 2019 லோக்சபா, 2021 சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை தொடர்ந்து, 2024 லோக்சபா தேர்தலும் தோல்வியை தழுவியுள்ளது, பேரதிர்ச்சியாக மாறியிருக்கிறது. நிர்வாகிகள் மட்டுமல்ல, இத்தேர்தல் முடிவு ஒவ்வொரு தொண்டர்களையும் சோர்வடைய செய்துள்ளது.தோல்வி என்பது இறுதியானதல்ல... வெற்றிக்கான படிக்கட்டு என்று கூறுவது போல், இனியாவது தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்து, இதற்கேற்ப அதிரடி மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அ.தி.மு.க., தொண்டர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி