இன்னும் சில நாட்களில் மழைக்காலம் துவங்க இருக்கிறது. வீடுகளின் உள்ளே, வெளியே உள்ள பாத்திரம், பிளாஸ்டிக் ட்ரம், நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள தொட்டி, குழி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.'அதனால் என்ன?' என அசட்டையாக இருந்து விட்டால், அது உயிரை பறிக்கவும் காரணமாகி விடும் என்பது தான், அதிர்ச்சியான விஷயம். மழைக்காலங்களில் இவ்வாறு தேங்கியுள்ள நீரில், ஏடிஸி வகை கொசுக்கள் உற்பத்தியாகும். அவ்வகை கொசுக்கள் கடிப்பதால், டெங்கு காய்ச்சல் ஏற்படும் என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.டெங்கு பாதிக்கப்பட்டால் கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி, உடல் வலி, ரத்த அணுக்கள் குறைவது என, பாதிப்பு அதிகமாகவே இருக்கும். 'இந்த வகை கொசுக்கள், சிக்-குன்-குனியா, மஞ்சள் காமாலை மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்' என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.'உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது, வழக்கமான பணியாக இருந்தாலும், மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்' என்கின்றனர், சுகாதாரத்துறை அதிகாரிகள்.குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்கி நிற்காத வகையிலான நடவடிக்கையை குடியிருப்பு வாசிகளும், சாலை, கால்வாய் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டிய பணியை உள்ளாட்சி நிர்வாகத்தினரும் ஏற்க வேண்டும்.டெங்கு என்பது தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கி வருகிறது.அந்த வகையில் இந்தாண்டை கருப்பொருளாக, 'டெங்கு தடுப்பு; பாதுகாப்பான எதிர்காலம், நம்முடைய பொறுப்பு,' என்ற கருத்து வழங்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து, டெங்கு இல்லா சூழலை உருவாக்க உறுதி ஏற்போம்!- இன்று, தேசிய டெங்கு தினம்.