| ADDED : மே 29, 2024 12:23 AM
பல்லடம்;மாகாளியம்மன் கோவில் திருப்பணியில் அரசியல் தலையீடு இருப்பதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், 500 ஆண்டு பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.தற்போது, நீண்ட காலமாக தடைபட்ட கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்ற திடமான முடிவுடன் பக்தர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்ட பக்தர்கள், அறநிலையத்துறை இணை ஆணையரை சந்தித்து முறையிடுவது என தீர்மானித்தனர்.இதையடுத்து பக்தர்கள் கூறியதாவது:அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாகாளியம்மன் கோவில் பல ஆண்டுகளாகியும் திருப்பணி நடத்தப்படவில்லை. திருப்பணிக்கு உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளாகியும், இங்குள்ள கோவிலுக்கு சொந்தமான கடைகள் அகற்றப்படாததால் திருப்பணி மேற்கொள்வதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.கோவில் திருப்பணியை முன் வைத்து ஆளுங்கட்சியினர் அரசியல் செய்வதே இதற்கு காரணம். கடைகளை அகற்றாமல் கோவில் திருப்பணி மேற்கொள்வதில் இடையூறு ஏற்படும் என்பதுடன், எதிர்காலத்தில், கோவில் எப்படி வளர்ச்சி பெறும்.எனவே, இனியும் தாமதம் ஏற்படுத்தாமல், கடைகளை அகற்றிவிட்டு கோவில் திருப்பணியை துவங்க வேண்டும். வழக்கும் தொடரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.