திருப்பூர்:மதுப்பழக்கம் காரணமாக, திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்கள் பலர், ஞாயிற்றுக்கிழமைக்கு மறுநாளும் 'சின்ன ஞாயிறு' ஆக கருதி, விடுமுறை எடுக்கும் பழக்கம் தொடர்கிறது. திருப்பூரில் குறைந்தபட்ச நடவடிக்கையாக, மதுக்கடை எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.திருப்பூர் பின்னலாடை மற்றும் சார் தொழிற்சாலைகளில், நேரடியாகவும், மறைமுகமாகவும், எட்டு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். உற்பத்தி பிரிவில் பெண் தொழிலாளர்கள் அதிகம். இருப்பினும், பெரும்பாலான பிரிவுகளில் ஆண் தொழிலாளரே அதிகளவில் பணிபுரிகின்றனர்.தினமும் ரூ.3 கோடி மது விற்பனைஉள்நாட்டு ஆடை உற்பத்தி, ஏற்றுமதி ஆடை என, தினமும், 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை உற்பத்தி நடக்கிறது. தொழிலாளர்களும், கோடிக்கணக்கான ரூபாயை தினசரி சம்பளமாக பெறுகின்றனர். வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுவது போல், திருப்பூர் நகரப்பகுதியில் மட்டும், தினமும் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடக்கிறது.பின்னலாடை தொழிலாளர்கள் பலர், கடந்த சில ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். சம்பளம் பெறும் சனிக்கிழமை இரவு துவங்கி, ஞாயிறு முழுவதும் போதாமல், 'சின்ன ஞாயிறு' என்ற பெயரில் திங்கட்கிழமையும் விடுமுறை எடுத்து மது அருந்துவது அதிகரித்துள்ளது.வெளிமாநிலதொழிலாளரை நம்பி...கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு பின்னலாடை நிறுவனமும், பெரும்பாலும் வெளிமாநில தொழிலாளர்களை பெரிதும் நம்பியுள்ளது. இதற்கு காரணம், இங்குள்ள தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மதுவுக்கு அடிமையாகி, பணித்திறனை இழந்துவிட்டதுதான்.தமிழக அரசு, தொழிலாளர்களின் குடும்பங்கள் சந்திக்கும் தொடர் பாதிப்புகளை கணக்கிட்டு, கவுன்சிலிங் மட்டும் கொடுத்தால் போதாது; பீஹார் போன்ற மாநிலங்களை முன்னோடியாக கொண்டு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.திருப்பூரில் பிரதான ரோடுகள், வீதிகள் என்று எங்கும் நிரம்பியிருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையையாவது முதலில் குறைக்க முன்வர வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையாவது முதலடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.உற்பத்தித்திறன் குறைகிறதுமதுபோதையில் சீரழியும் இளைஞர் மற்றும் தொழிலாளருக்கு கவுன்சிலிங் கொடுத்து மீட்க வேண்டும். மதுப்பழக்கத்தால், திறமை இழப்பு ஏற்படுகிறது; சோம்பேறித்தனம் அதிகரித்து, வழக்கமான உற்பத்தி திறனும் குறைந்துவிடும். இதன்காரணமாக, தொழிற்சாலைகளுக்கு கண்ணுக்கு தெரியாத இழப்பு ஏற்படுகிறது.உடல் பலவீனமடைவதால், 50 வயதுக்கு மேல் தொழிலில் இருந்து வெளியேறி விடுகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட முழுமுதற் காரணம் மதுபோதை. அதிக சம்பளம் இருந்தும், தேவையான வசதி செய்து கொடுத்தும், மதுப்பழக்கத்தால் வாழ்க்கை இழக்கின்றனர்.வடமாநில இளைஞர்கள், தமிழகத்திற்கு சென்றால், குடிப்பழக்கம் ஏற்படுவதாக, ஒடிசாவில் முகாம் நடத்திய போது, அங்குள்ள மக்கள் எங்களிடம் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், வடமாநில தொழிலாளர் தொழில் கற்றபிறகு, மீண்டும் சொந்த ஊருக்கு சென்று யூனிட் துவங்கி விடுகின்றனர். பின்னலாடை தொழில் பல மாநிலங்களுக்கும் நகர்ந்துவிட்டது.மதுவை முழுமையாக ஒழிக்காமல் ஒருபோதும் திறன் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, தொழில் மேம்பாடு செய்ய முடியாது. கவுன்சிலிங் மட்டும் போதுமானது அல்ல; 100 சதவீதம் போதை பாதிப்பை கட்டுப்படுத்த முடியாது; வருவாய் கிடைப்பதை மட்டும் எதிர்பாராமல், மதுவை படிப்படியாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அண்ணாதுரை, ஒருங்கிணைப்பாளர்,திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுசம்பளம் பெறும் சனிக்கிழமை இரவு துவங்கி, ஞாயிறு முழுவதும் போதாமல், 'சின்ன ஞாயிறு' என்ற பெயரில் திங்கட்கிழமையும் விடுமுறை எடுத்து மது அருந்துவது அதிகரித்துள்ளது