திருப்பூர், : 'பள்ளி மாணவ, மாணவியருக்க மனநல ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் கடும் முயற்சி மேற்கொண்டன.இதில், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் போன்ற தொழில் நகரங்களில், மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது.இது குறித்து, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:திருப்பூரில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில், உள்ளூர் மாணவர்களுடன் தொழில் தேடி பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள்அதிகம் படிக்கின்றனர்.பெற்றோர் இருவரும், வேலைக்கு செல்லும் நிலையில், மாணவர்களின் கல்வி மீது, அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.கடந்த காலங்களில், மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் சார்பில், ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.அவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது அத்தகைய ஆலோசனைகள் எதுவும் வழங்கப்படுவதாக தெரியவில்லை.கொரோனாவுக்கு பின், மொபைல் போன்களுக்கு பிள்ளைகள் அடிமையாகிவிட்ட நிலையில், அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது மிக கடினமாக இருக்கிறது.எனவே, பிள்ளைகளுக்கு அவ்வப்போது மனநல ஆலோசனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.