உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு பூங்கா கூட ஒழுங்கா இல்லையே! நகர மக்கள் வருத்தம்

ஒரு பூங்கா கூட ஒழுங்கா இல்லையே! நகர மக்கள் வருத்தம்

உடுமலை:நகரில் முறையாக பராமரிக்கப்படாமல், பயன்படுத்த முடியாத நிலைக்கு பல பூங்காக்கள் மாறியுள்ளதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்யவும் மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், வசிக்கும், 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்பவர்களுக்கும், நகரில் ஒரு பொழுதுபோக்கு இடம் கூட கிடையாது.

'குடி'மகன்களுக்கு ஒப்படைப்பு

பல லட்சம் ரூபாய் அரசு நிதி, பல முறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்ட அண்ணா பூங்காவை, 'குடி'மகன்கள் பயன்பாட்டுக்காக நகராட்சியினர் ஒதுக்கீடு செய்து விட்டனர்.ராஜேந்திரா ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில், மதுபாட்டில்கள் வாங்கும் 'குடி'மகன்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல், மது அருந்தவும், நிழலில் இளைப்பாறவும், இந்த பூங்காவை தாரை வார்த்து விட்டனர்.இதனால், அப்பகுதிக்கு குழந்தைகள், பெண்கள் யாரும் எட்டிப்பார்க்காத முடியாத சூழ்நிலை உள்ளது. இது குறித்து, போலீசாரும் கண்டுகொள்வதில்லை.

திட்டங்கள் ஏராளம்

நகரிலுள்ள அனைத்து வார்டுகளிலும், ரிசர்வ் சைட்களை மீட்டு, பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு திட்டத்திலும், சில பூங்காக்கள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், நகரம் முழுவதும் சுற்றினாலும், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில், ஒரு பூங்காவை கூட கண்டுபிடிக்க முடியாது.அனைத்து ரிசர்வ் சைட்களையும் மீட்டு, பூங்கா அமைப்போம் என்ற வாக்குறுதி கண்டுகொள்ளப்படவில்லை. பெரும்பாலான பூங்காக்கள் புதர் மண்டியும், அதிலுள்ள உபகரணங்கள் துருப்பிடித்தும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது.உடுமலை நகரிலுள்ள ரிசர்வ் சைட்களில், பூங்கா அமைக்கும் திட்டம் இழுபறியாகவே உள்ளது. இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்ட முறை; தற்போது பூங்காக்களின் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால், உடுமலை நகர மக்களின் பூங்கா கனவு கனவாகவே மறைந்து விடும். இதே போல், பல லட்ச ரூபாய் அரசு நிதியை விழுங்கிய அண்ணா பூங்கா குறித்தும், விசாரணை நடத்துவது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை