உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் வினியோக கட்டமைப்பில் அடிக்கடி பழுது: மீண்டும் மின் தடையால் பொதுமக்கள் கவலை

மின் வினியோக கட்டமைப்பில் அடிக்கடி பழுது: மீண்டும் மின் தடையால் பொதுமக்கள் கவலை

திருப்பூர்;'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளதால், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், மின் வினியோக கட்டமைப்பில் பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்பட்டு வருகிறது, பொதுமக்களை கவலையடைய செய்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன; அதேபோல், குடியிருப்பு பகுதிகளும் அதிகரித்துள்ளன. பொதுத்தேர்வு காரணமாகவும், தேர்தல் பணி துவங்கிய பின்னரும், மின் பராமரிப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.நாள் முழுவதும் மின்வினியோகத்தை நிறுத்தி, பராமரிப்பு பணியை செய்வது கைவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பழுதாகும் பகுதியில் மட்டும், ஒரு மணி நேரம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், கடந்த சில வாரங்களாக, 'ஏசி' விற்பனையும், ஏர் கூலர் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதனால், மின்பயன்பாடும் ஒரே காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 'டிரான்ஸ்பார்மரிலும் 'லோடு' அதிகமாவதால், முக்கியமான மின்வினியோக கருவிகள் அடிக்கடி பழுதாகின்றன.திருப்பூரில் உள்ள துணை மின் நிலையங்களில், ஒரு வழிப்பாதை மட்டுமே பயன்பாட்டில் உள்ளன; அவசர தேவைக்காக, மின்வினியோகம் மற்றும் மின்சாரத்தை பெறுவதற்கான மாற்றுப்பாதை இல்லை. இதுவும் தற்போதைய மின் தடைக்கு முக்கிய காரணம்.வீட்டு இணைப்புகளில், திடீரென மின்பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆங்காங்கே சிறிய பாதிப்பு ஏற்படுகின்றன. அதனால், எஸ்.எம்.எஸ்., வாயிலாக, மின்நுகர்வோருக்கு தகவல்அளித்துவிட்டு, உட்பிரிவு பகிரமானத்தில் மட்டும், ஒரு மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.அக்னி நட்சத்திர வெயில் கொளுத்த துவங்கியுள்ளதால், தற்போதைய அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது, அறிவிக்கப்பட்ட அறிவிப்பாக மாறுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், பனியன் நிறுவனங்களிலும் உற்பத்தி கடுமையாக பாதிக்குமென, அச்சம் ஏற்பட்டுள்ளது.கடந்த, 2010- 11ம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஒரு மின்வெட்டு பிரச்னையை சந்திக்க வேண்டுமோ என்ற அச்சம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

மின் தடை இல்லை தடங்கல் மட்டுமே!

இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது: பராமரிப்பு பணி நடக்காமல் இருக்கும் நிலையில், வெயில் காரணமாக 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், அடிக்கடி குளறுபடி ஏற்படுகிறது. அதற்காக, அந்தந்த பகுதிகளில் மட்டும் மின்சாரத்தை தடை செய்து, பராமரிப்பு பணியை செய்கிறோம்.நுகர்வோர் வசதிக்காக, மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இதனை மின்தடை என்று கூற முடியாது; சிறிய தடங்கல் மட்டுமே. சேலத்தில் இருந்து தொழில்நுட்ப குழுவினரை அழைத்து வந்து, திருப்பூரின் பல இடங்களில் துரிதகதியில் பணிகளை செய்து வருகிறோம். ஒரு வாரகாலத்துக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி