உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கைகொடுத்த கோடை மழை களைகட்டும் நிலக்கடலை சாகுபடி

கைகொடுத்த கோடை மழை களைகட்டும் நிலக்கடலை சாகுபடி

திருப்பூர் : 'கோடை மழை கை கொடுத்த நிலையில், இந்தாண்டு, நிலக்கடலை விளைச்சல் களைகட்டும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர் வட்டாரத்தில் மட்டும், ஜூன் மாத கடைசியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர்.'இப்பகுதியில் மட்டும், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது' என்பது, வேளாண் துறையினரின் கணக்கு. இதுதவிர ஊத்துக்குளி, குன்னத்துார், செங்கப்பள்ளி, பெருமாநல்லுார் உள்ளிட்ட திருப்பூர் நகரின் சில இடங்களிலும் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை, ஆக., மாதம் அறுவடை செய்யப்படும்; அவை, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வாயிலாக விற்பனை செய்யப்படும். கடந்த ஓராண்டாக, இந்த ஏல மையத்தில், மறைமுக ஏலம் நடத்தப்படுவதால், நிலக்கடலைக்கான விலையும் சற்று அதிகமாகவே உள்ளது.பொதுவாக, வானம் பார்த்த, வறட்சியான மானாவாரி நிலத்தில் தான் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலையில், இம்முறை கோடை மழை கை கொடுத்த நிலையில், விவசாய நிலங்கள் இளகி, உழவுக்கு உகந்ததாக மாறியுள்ளது. விவசாயிகள் நிலத்தை உழவு செய்ய துவங்கியுள்ளனர். அடுத்த வாரம், விதைப்புப்பணி துவக்குவர்.'கோடையை தொடர்ந்து, பருவமழை பெய்யும் பட்சத்தில், மகசூல் அதிகமாக இருக்கும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரம், தொடர்ந்து மிக அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில், நிலக்கடலை செடிகள் அழுகவும், மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது எனவும், அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, வானிலையை நம்பி விவசாயிகள், நிலக்கடலை சாகுபடியில் இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி