உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுத்திகரித்த தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்? சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள் அவதி

சுத்திகரித்த தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்? சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள் அவதி

திருப்பூர் : சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், கூடுதலாக ஒரு மீட்டர் ஆழத்தில், சிமென்ட் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, சிறிய அளவிலான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. திருப்பூர் ஆண்டிபாளையம் சுற்றுப்பகுதியில் உள்ள வார்டுகளுக்காக, ஆண்டிபாளையம் குளம் அருகே, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரும் பாதாள சாக்கடை கழிவை சுத்திகரித்து, குளத்தில் இருந்து வெளியேறும் கால்வாயில் சுத்தமான தண்ணீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. கடந்த, 2021ம் ஆண்டு, சின்னாண்டிபாளையம் பிரிவு முதல், குளத்துக்கடை பஸ் ஸ்டாப் வரை, பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டன.குறிப்பாக, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. அப்பகுதி பாறை நிலமாக இருந்ததால், வெடி வைத்து, ஆழப்படுத்தி, குழாய்கள் பதிக்கப்பட்டன. சோதனை முறையில், தண்ணீர் விட்டு பார்த்த போது, சரியான அளவில் குழாய் இல்லாததால், தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டது.அதாவது, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், உபரிநீர் வெளியேறும் வாய்க்கால்களுக்கு சென்று சேரவில்லை. இதன்காரணமாக, இரண்டு ஆண்டு களுக்கு முன் பதித்த குழாய்களை உடைத்து எடுத்து, மீண்டும் ஒரு மீட்டர் ஆழமாக பதிக்கும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில்,'கடந்த, 2021ல், நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டு, குழாய் பதிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டது. இருப்பினும் சரியாக தண்ணீர் செல்லாததால், மீண்டும் குழாயை தோண்டி எடுத்து, ஆழப் படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால், நல்ல நிலையில் இருந்த ரோடு மீண்டும் சேதமாகிவிட்டது.உயர் அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியாக மறுசீராய்வு செய்து, சரியான முறையில் குழாய்களை பதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பெரியாண்டிபாளையம் பிரிவு சேனா பள்ளம் முதல், சின்னாண்டிபாளையம் வரை, தார்ரோடு தரமில்லாமல் பேட்ஜ் ஒர்க் செய்யப்படுகிறது; இப்பகுதியில், விரைவாக ரோட்டை புதுப்பித்து, தரமான தார்ரோடு அமைத்துக்கொடுக்க வேண்டும்,' என்றனர்.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கூறியதாவது: ஒரு வாரத்துக்குள், முழு அளவில் சுத்திகரிப்பு பணி துவங்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குழாய் மூலமாக, குளத்தின் உபரிநீர் வெளியேறும் வாய்க்கால் வரை கொண்டுவந்து விடப்படும். இதற்கு முன், சுத்தி கரிப்பு நிலையத்துக்கு கழிவுநீரை எடுத்து வரும் குழாய் பதிக்கப்பட்டிருந்தது. தற்போது, சுத்திகரித்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக குழாய் பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகளை முடித்து, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு பணி முழு வேகத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !