திருப்பூர் : தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், திருப்பூரில், உருவாக்கப்பட்ட 'மரகதப் பூஞ்சோலை' நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.தமிழக அரசு, அமெரிக்க நிதியுதவி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள, 17 ஆயிரம் கிராமங்களில் 'மரகதப் பூஞ்சோலை' அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில், 75 மரகத பூஞ்சோலைகளை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.திருப்பூர் மாவட்டத்தில், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில், திருப்பூர் வனத்துறை சார்பில், அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சோலையும் திறக்கப்பட்டது.கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பொங்கலுார் ஊராட்சி தலைவர் குமார், திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா, பல்லடம் பிரிவு பாரஸ்டர் உமா மகேஸ்வரி, வனப்பணியாளர்கள், பெத்தாம்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள் பங்கேற்றனர்.மொத்தம், 1.75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், மலர் செடிகள், மரச்செடிகள், பழம் தரும் செடிகள் நடவு செய்யப்பட்டு; நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், குழந்தைகள் பூங்கா, பொதுமக்கள் அமர்ந்து இளைபாறுவதற்கான அறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.