திருப்பூர்;அதிகபட்ச கெடுபிடியால், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஒரு சிலர் மட்டும் கனவு இல்ல பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதனால், ஏழைகள் பலரது சொந்த இல்லக் கனவு கலைகிறது.தமிழக அரசு சார்பில், 'கனவு இல்லம்' திட்டம், 3.50 லட்சம் ரூபாய் மானியத்துடன், நடப்பு நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த கணக்கெடுப்பு அடிப்படையில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குடிசைவாழ் மக்களும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஊராட்சிகளில் நேற்று நடந்த சிறப்பு கிராமசபா கூட்டத்தில், பயனாளிகள் பட்டியல் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. இருப்பினும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா நடப்பது குறித்து, பெரும்பாலானோருக்கு தெரியவில்லை; வேலை உறுதி திட்ட தொழிலாளருக்கு மட்டுமே தெரிந்திருந்தது; மாவட்ட நிர்வாகமும் உரிய முறையில் அறிவிப்பு செய்யவில்லை.'கனவு இல்லம்' திட்டத்தில் அதிகபட்ச கெடுபிடி செய்வதால், பயனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். விண்ணப்பித்து காத்திருந்தவர்கள் அதிகம் பேர் விடுபட்டுள்ளனர். பயனாளிகள் பட்டியல் கடந்த காலங்களில் முறையில்லாத வகையில், தயாரிக்கப்பட்டுள்ளது.வீடு வீடாக செல்லாமல், பயனாளிகள் பட்டியல் பெயர் அளவுக்கு தயாரிக்கப்பட்டது. இதன் காரணமாக, 'கனவு இல்லம்' கட்டலாம் என்ற பயனாளிகள் கனவு கலைந்துவிட்டதாகவே, கவலை தெரிவித்துள்ளனர். ---திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபாவில் பங்கேற்ற பொதுமக்கள்.
மத்திய அரசு திட்டத்தில்
வீடு கட்ட பரிந்துரை-------------உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த போது, பயனாளிகள் பட்டியல் பெயர் அளவுக்கு தயாரிக்கப்பட்டது. இதனால், தற்போதைய கனவு இல்லம் திட்டத்தில் அதிகபட்ச பயனாளிகள் பயன்பெற முடியாது. ஊராட்சிக்கு ஒருவர், இருவர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். தமிழக அரசு, அதிகபட்ச கெடுபிடியை தளர்த்த வேண்டும். மீண்டும் விரிவான கணக்கெடுப்பு நடத்தி, உண்மையான பயனாளிகளுக்கான திட்டமாக செயல்படுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட பரிந்துரைக்க வேண்டியிருக்கும்.- ஊராட்சி தலைவர்கள்.