அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோட்டில், சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டது. அதனை எதிர்த்து பல்வேறு சமூக அமைப்பினர், கட்சியினர் போராட்டம், நடத்துவதாக அறிவித்தனர்.இந்நிலையில், கலெக்டர், எஸ்.பி., அறிவுறுத்தலின் பேரில் கடந்த, 3ம் தேதி வரை, மனமகிழ் மன்றத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், 3ம் தேதி கடந்த பின்னரும் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருவதை அறிந்த கட்சியினர், பேரூராட்சி கவுன்சிலர்கள், டி.எஸ்.பி., சிவக்குமாரிடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து, டி.எஸ்.பி., அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில், வரும் 15ம் தேதி வரை மனமகிழ் மன்றத்தை மூட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்ப்பு குறித்து உரிய தகவல்கள் தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, சிவப்பிரகாஷ், தங்கவேலு (தி.மு.க.,), ஈஸ்வரமூர்த்தி (மா.கம்யூ.,), சண்முகம் (இ.கம்யூ.,), மூர்த்தி (அ.தி.மு.க.,), பாபு (ம.தி.மு.க.,), ராஜ்குமார் (கொ.ம.தே.க.,) அவிநாசி அனைத்து வன்னியர் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.