திருப்பூர்;வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் வரும் 20ல் துவங்கி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், வரும் 20ம் தேதி முதல், ஜமாபந்தி(வருவாய்த்துறை வரவு-செலவு கணக்கு தணிக்கை) துவங்கி நடைபெறுகிறது. மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும், கலெக்டரால் நியமிக்கப்படும் அலுவலரால், ஜமாபந்தி நடத்தப்படுகிறது.* காங்கயம் தாலுகா: காங்கயம் உள்வட்டத்துக்கு, வரும் 20ம் தேதி; ஊதியூர் உள்வட்டத்துக்கு 21ம் தேதி; நத்தக்காடையூருக்கு 25ம்; வெள்ளகோவிலுக்கு 26ம் தேதி ஜமாபந்தி நடைபெறுகிறது.* ஊத்துக்குளி தாலுகா: குன்னத்துார் உள்வட்டத்துக்கு 20ம் தேதி; ஊத்துக்குளி உள்வட்டத்துக்கு 21ம் தேதி.* பல்லடம் தாலுகா: பல்லடம் உள்வட்டத்துக்கு 20ம் தேதி; கரடிவாவி 21ம் தேதி; சாமளாபுரம் 25 ம் தேதி; பொங்கலுார் உள்வட்டம் 26ம் தேதி.* திருப்பூர் வடக்கு தாலுகா: திருப்பூர் வடக்கு உள்வட்டம், 20ம் தேதி; வேலம்பாளையம், 21ம் தேதி.* திருப்பூர் தெற்கு தாலுகா: திருப்பூர் தெற்கு உள்வட்டம், 20ம் தேதி; நல்லுார், 21ம் தேதி; தெற்கு அவhனாசி பாளையம் 25ம் தேதி.* தாராபுரம் தாலுகா: தாராபுரம் உள்வட்டம், 20ம் தேதி; அலங்கியம், 21ம் தேதி; மூலனுார் உள்வட்டம், 25ம் தேதி;கன்னிவாடி, 26ம் தேதி; குண்டடம், 27ம் தேதி; பொன்னாபுரம், 28ம் தேதி; சங்கராண்டாம்பாளையம், ஜூலை 2ம் தேதி.* மடத்துக்குளம் தாலுகா: மடத்துக்குளம் உள்வட்டம், வரும் 20ம் தேதி; துங்காவி 21ம் தேதி.* உடுமலை தாலுகா: உடுமலை உள்வட்டம், 20ம் தேதி; குறிச்சிக்கோட்டை, 21ம் தேதி; பெரியவாளவாடி 25ம் தேதி; குடிமங்கலம் 26ம் தேதி; பெதப்பம்பட்டி, 27 ம் தேதி.* அவிநாசி தாலுகா: சேவூர் உள்வட்டம், 20ம் தேதி; அவிநாசி மேற்கு உள்வட்டத்துக்கு 21ம் தேதி; அவிநாசி கிழக்கு வட்டத்துக்கு 25ம் தேதி; பெருமாநல்லுாருக்கு 26ம் தேதி ஜமாபந்தி நடைபெறுகிறது.ஜமாபந்தி நாட்களில், அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்து, உடனடி தீர்வு பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
'வருவாய்த்துறையின் திருவிழா'
விதவிதமான உணவு பதார்த்தங்களோடு பந்தி பரிமாறும், சமபந்தி என்பது எல்லோருமே அறிந்தது. ஆனால், வருவாய்த்துறை சார்பில் நடத்தப்படும் ஜமாபந்தி பற்றி உங்களுக்கு தெரியுமா? வருவாய்த்துறையின் வரவு - செலவு கணக்குகளை சரிபார்த்து, தணிக்கை செய்வதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படுவதுதான், ஜமாபந்தி. இது, இன்று நேற்றல்ல, அக்பர் ஆட்சி காலத்திலிருந்தே, ஜமாபந்தி என்ற பெயரில், வருவாய் தீர்வாயம் நடத்தப்பட்டுள்ளது. ஜமாபந்தியை, வருவாய்த்துறையின் திருவிழா என்றே அழைக்கின்றனர். வருவாய்த்துறையை பொருத்தவரை, கிராம நிர்வாகம், பிர்கா, தாலுகா, வருவாய் கோட்டம், மாவட்டம் என, ஐந்து அடுக்குகளை கொண்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் வருவாய் தீர்வாயத்தில், வருவாய்த்துறை பராமரிக்கும் 24 வகையான பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படுகிறது.எவ்வளவோ நவீனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தாலும் கூட, ஜமாபந்திக்கென ஒரு பாரம்பரியம், அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு வகைப் பதிவேடுகள், துணிகளில் மூட்டைகளாகவே, ஜமாபந்தி நடைபெறும் தாலுகா அலுவலகங்களுக்கு எடுத்துவரப்படுகிறது. நில அளவைக்கு பயன்படுத்தப்படும் கோணம் பார்க்கும் கட்டை, நில அளவை சங்கிலி கொண்டுவரப்பட்டு, சரியான நிலையில் உள்ளனவா என, ஜமாபந்தியில் சரிபார்க்கப்படும்; சரியான அளவில் உள்ளதை உறுதிப்படுத்தியபின்னரே, நடப்பு ஆண்டில் அவை பயன்படுத்தப்படும்.