உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தல்

தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை;இரண்டாம் மண்டல பாசனத்தில், தண்ணீர் திருட்டை தடுக்க, கண்காணிப்பு குழுவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 90 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு, இருப்பு செய்யப்பட்டு, விரைவில், தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இப்பாசனத்துக்கு, மக்காச்சோளம் பிரதான சாகுபடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பாசன வசதி பெற உள்ள விளைநிலங்களில், முதற்கட்ட பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.போதிய மழை இல்லாமல், துவங்கும் பாசனத்தில், தண்ணீர் திருட்டை தடுக்காவிட்டால், ஆயக்கட்டு பகுதி முழுவதுமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய், கிளை, பகிர்மான வாய்க்கால் என பல கி.மீ., துாரம் தாண்டியே விளைநிலங்களுக்கு தண்ணீர் வருகிறது.வழியோரங்களில், திருடப்படும் தண்ணீரை விட, குறைந்தளவே, ஆயக்கட்டு பகுதிகளில், சில மடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் அவலம் உள்ளது.குறிப்பாக, பிரதான கால்வாய் கரைகளில், தண்ணீர் திருட்டுக்காக, குழாய்கள் பதித்துள்ளனர்; இரவு நேரங்களில், கால்வாயிலிருந்து திருடும் தண்ணீரை, கிணறுகளிலும், நேரடியாகவும் பயன்படுத்துகின்றனர்.இப்பிரச்னையால், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களிலுள்ள கால்வாய்களில், போதுமான தண்ணீர் கிடைக்காமல், மக்காச்சோளம் உட்பட சாகுபடிகள் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.அப்போது, விவசாயிகள் புகார் அடிப்படையில், பொதுப்பணித்துறையினர் சில நாட்கள் ரோந்து செல்கின்றனர். பின்னர், திருட்டு வழக்கம் போல், நடக்கிறது.இரண்டாம் மண்டல பாசனத்தில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பிரதான கால்வாயின் கடைமடை வரை கண்காணிக்க நிரந்தர குழு அமைக்க வேண்டும்.போலீஸ், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உட்பட துறைகளை உள்ளடக்கிய குழுவை பாசன காலம் முடியும் வரை நாள்தோறும் ரோந்து செல்லும் வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். பிரதான கால்வாய் கரையில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இருக்கும், பாதைகளை சீரமைக்க வேண்டும். தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் கண்காணிப்பு குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும், இத்தகைய குழுக்களை உடனடியாக அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ