| ADDED : ஜூலை 03, 2024 02:41 AM
உடுமலை;உடுமலை நேதாஜி மைதானத்தில், நடைபாதையை தன்னார்வலர்கள் சீரமைத்தனர்.உடுமலை நேதாஜி மைதானத்தில் நாள்தோறும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி, ஜாக்கிங் செய்கின்றனர். விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெண்கள் உட்பட பலர் மைதானத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லை.உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்டது இந்த மைதானம். அப்பள்ளியிலும் மைதான வசதி இருப்பதால், பொது விளையாட்டு பயிற்சிகளுக்கும், மற்ற பள்ளிகள் பயன்படுத்திக்கொள்வதற்கும் பள்ளி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.இங்கு, பல தனியார் அமைப்புகளின் சார்பில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் வாயிலாக, போட்டிகளை நடத்துவோர் லாபமும் பெறுகின்றனர். ஆனால் மைதானத்தின் மேம்பாட்டுக்கென எந்த விதமான பணிகளும் மேற்கொள்வதில்லை.தற்போது இங்கு நடைபயிற்சி செய்வோர், பல தன்னார்லர்கள் முன்வந்து நடைபாதையை சீரமைக்கும் பணிகளை துவங்கியுள்ளனர்.அதேபோல் மைதானத்தின் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, போட்டிகள் நடத்த தனியார் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கும் வகையில், அரசுப்பள்ளி செயல்பட வேண்டியதும் அவசியமாகிறது.