திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 888 முழு நேர ரேஷன் கடைகளுக்கும், கண் விழி பரிசோதனை கருவி நேற்று வழங்கப்பட்டது. இதனால், பொருட்கள் வினியோகிப்பதால், சிக்கல் ஏதும் இருக்காது ரேஷன் கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு, பொதுவினியோக திட்டத்தை, பல்வேறு காலகட்டத்தில் மேம்படுத்தி வருகிறது. ஆதார் விவரங்களை இணைத்த பிறகு, பொதுவினியோக திட்டத்தில் இருந்த போலிகள் நீங்கிவிட்டன. முழுமையாக ஆன்லைன் மூலமாக கண்காணிக்கும் வகையில், டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற விற்பனை கருவி பயன்படுத்தப்பட்டது. கார்டுதாரர் கைவிரல் ரேகை சரிபார்ப்புக்கு தனியே, 'பயோமெட்ரிக்' கருவி வழங்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு, புதுவகை 'பாயின்ட் ஆப்சேல்' மெஷின் வழங்கப்படுகிறது. 888 கடைகளுக்கு...அதன்படி, கைவிரல் ரேகை பதிவு, 'பில்'லை பிரின்ட் எடுக்கும் வசதிகளுடன் புதிய மெஷின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அத்துடன், கை விரல்ரேகை பதிவாகாத முதியோருக்கு, கண் விழிகளை சரிபார்த்து பொருட்கள் வழங்க ஏதுவாக, கண் விழி சரிபார்ப்பு கருவியும் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,035 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில், முழு நேரம் இயங்கும், 888 ரேஷன் கடைகளுக்கு, முதல் கட்டமாக, புதிய மெஷின் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், 70 கடைகளுக்கு சோதனை முறையில் வழங்கி, சரிபார்க்கப்பட்டது.இந்நிலையில், கடந்த மாதம், 818 கடைகளுக்கும் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் ஒன்பது தாலுகாக்களில் உள்ள, 888 முழு நேர ரேஷன் கடைகளுக்கான, கண்விழி சரிபார்ப்பு கருவிகள் நேற்று வழங்கப்பட்டது. ரேஷன் பணியாளர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, கண் விழி சரிபார்ப்பு கருவியை பெற்றுக்கொண்டனர்.இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில்,'ரேஷன் கடைகளில், முதல்கட்டமாக முழு நேர கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப்சேல்' புதிய மெஷின் வழங்கப்பட்டுள்ளது; அடுத்தகட்டமாக, பகுதி நேரமாக இயங்கும், 147 கடைகளுக்கு, விரைவில் புதிய மெஷின் வழங்கப்படும். கைவிரல் ரேகை பதிவு ஆகாதபட்சத்தில் மட்டும் கண்விழி சரிபாப்பின் மூலமாக, பொருட்கள் வழங்கப்படும்,' என்றனர்.