| ADDED : ஆக 14, 2024 11:16 PM
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு; அந்த அடையாளமே அந்த ஊரின் பெருமையாக இருக்கும். அந்த வகையில், கொங்கு மண்டலத்தின் அடையாளம் நொய்யல் ஆறு.தொல்லியல் பழமை வாய்ந்த கொடுமணல், இந்த ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது என்பது பெருமை. தேச விடுதலை போரில் பங்கெடுத்த திருப்பூரை சேர்ந்த தியாகிகளின், ஆலோசனைக் களமாக நொய்யல் ஆற்றங்கரை அமைந்திருந்தது, என்பது கூடுதல் பெருமை.கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலையிலிருந்து உருவாகும் ஓடைகள் இணைந்து, இந்த ஆறு உருவெடுக்கிறது. கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்துார், வெள்ளலுார், இருகூர், சூலுார், மங்கலம் வழியாக திருப்பூர், ஒரத்துப்பாளையம் வந்தடைகிறது. பின், கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. கிட்டத்தட்ட, 180 கி.மீ., பயணிக்கும் இந்த ஆறு கொங்கு மண்டலத்தின் ஆகச்சிறந்த அடையாளம்.சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த திருப்பூரில் இருந்த தியாகிகள், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் குறித்து, திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றுப்பாலத்தின் மேற்கு பகுதியில், அகன்ற மணல் பரப்பிய இடத்தில் தான், திட்டங்களை தீட்டுவார்களாம். நொய்யல் ஆறு, தேச விடுதலையின் ஒரு அடையாளமாகவும் இருப்பது, திருப்பூர் மக்களுக்கு பெருமை.