திருப்பூர்:இந்திய மருத்துவர்கள் சங்க (ஐ.எம்.ஏ.,) திருப்பூர் கிளை சார்பில், டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஐ.எம்.ஏ., திருப்பூர் கிளையில், 900 டாக்டர்கள் உறுப்பினராக உள்ளனர். கணியாம்பூண்டியில், ஐ.எம்.ஏ., திருப்பூர் கிளை சங்க கட்டடம் உள்ளது. கட்டடத்தை பொலிவுபடுத்தி, கூடுதல் வசதிகளுடன் கூடிய ஆடிட்டோரியமாக மாற்றப்பட்டுள்ளது. ஆடிட்டோரியம், சமையல் கூடம், டைனிங்ஹால், பார்க்கிங் வசதியுடன் கூடிய மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. திறப்பு விழா நேற்று நடந்தது.கணியாம்பூண்டியில் நடந்த டாக்டர்கள் தின விழா மற்றும் பொலிவூட்டப்பட்ட டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு விழாவுக்கு, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் உறுப்பினர் முருகநாதன் தலைமை வகித்தார். ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் டாக்டர் அசோகன், ஆடிட்டோரியத்தை திறந்து வைத்தார். மாநில தலைவர் டாக்டர் அபுல் ஹசன், இரண்டாவது அரங்கை திறந்து வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, திருப்பூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியராஜன், முன்னாள் தலைவர் டாக்டர் சரோஜா, செயலாளர் டாக்டர் ஆனந்த், நிதி செயலர் டாக்டர் பாத்திமாபேகம், இணை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, குழந்தைகளின் கல்வி நிகழ்ச்சிகள் நடந்தன; போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, நிர்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.----இந்திய மருத்துவர் சங்க, திருப்பூர் கிளையில், மருத்துவர் தின விழா மற்றும் டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆடிட்டோரியத்தை தேசிய தலைவர் டாக்டர் அசோகன் திறந்து வைத்தார். அருகில் மாநில தலைவர் டாக்டர் அப்துல் ஹசன், மாநில மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகநாதன், திருப்பூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியராஜன் உள்ளிட்டோர்.
டாக்டர் முருகநாதனுக்கு கவுரவம்
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளாக, மாநில அளவிலான சிறப்பான செயல்பாடு என்ற அடிப்படையில், திருப்பூர் ஐ.எம்.ஏ., முதலிடத்தில் இருந்து வருகிறது. டாக்டர் முருகநாதன், 2003ல் மாநில தலைவராக இருந்த போது, திருப்பூரில் மாநாடு நடத்தினார். சங்கத்துக்கு இடம் வாங்கி, அலுவலகம் கட்ட, முழு அளவில் முயற்சித்து வந்தார்.ஒட்டுமொத்த டாக்டர்கள் மற்றும் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவரது சேவைப்பணியை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், புதிய ஆடிட்டோரியத்துக்கு, 'டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம்' என்று பெயர் சூட்டியுள்ளோம். மருத்துவத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், மருத்துவ ரீதியான ஆலோசனைகளுக்கும், புதிய ஆடிட்டோரியம் பயன்படுத்தப்படும். சங்க நிகழ்ச்சிகள், மருத்துவமுகாம் உட்பட, வழக்கமான நிகழ்வுகளுக்கும் மண்டபம் வாடகைக்கு விடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர். **