உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர் நிலை சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு 

நீர் நிலை சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு 

திருப்பூர்:'ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் சுகாதாரத்தை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். உயர் சிறப்பு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்,' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.சில தினங்களுக்கு முன் கேரளாவில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு பரவியது. அசுத்தமான தண்ணீரில் உள்ள அமீபா மூலம் உருவாகும் 'என்சபலிட்டிஸ்' எனப்படும் மூளையழற்சி பாதிப்பு, சுகாதாரமற்ற தண்ணீரில் குளிக்கும் போது, சுவாசப்பாதை வழியே ஊடுருவி சென்று, நேரடியாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.இதனால், காய்ச்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி, பிதற்றல், வலிப்பு ஏற்பட்டு விடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தால், காப்பாற்ற முடிகிறது. கேரள பாதிப்பையடுத்து, பொதுசுகாதாரத்துறை சார்பில், அனைத்து உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட சுகாதாரத்துறைக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.தேங்கி நிற்கும், மாசுபட்ட அழுக்கு நீரில் பொதுமக்கள், குறிப்பாக, குழந்தைகள் நீந்துவதற்கும், குளிப்பதற்கும் அனுமதிக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் இதனை தீவிரமாக கண்காணிப்பதுடன், தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரி போன்றவற்றை சுற்றிலும் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை உடனே உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நீச்சல் குளம் என்றால், போதுமான குளோரினேஷன் கட்டாயமாக்க வேண்டும். நீர்நிலைகளை இயன்ற வரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொது சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். அறிகுறிகள், உடல்நலக்குறைவு யாருக்காவது ஏற்பட்டால், அவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி, உயர்சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திட வேண்டும்' என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை