திருப்பூர் : ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய ஒன்பது தாலுகாக்களிலும், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி, கடந்த ஜூன் 20 ல் துவங்கியது. 33 பிர்காக்களுக்கு உட்பட்ட, 350 வருவாய் கிராமங்களின் வருவாய்த்துறை கணக்குகள் சரிபார்கப்பட்டு, ஜமாபந்தி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது.பொதுமக்கள் தங்கள் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தியில் பங்கேற்று, பட்டா மாறுதல், நில அளவை, இருப்பிட சான்று உள்பட வருவாய்த்துறை சார்ந்த சான்றுகள், வீட்டுமனை பட்டா, நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகள்; அடிப்படைவசதிகள் கேட்டு, ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளித்தனர்.ஒவ்வொரு தாலுகாவிலும், பொதுமக்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சான்றுகள் கோரும் சில மனுக்கள் மீது மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள், துறை சார்ந்த அலுவலர்களின் பரிசீலனையில் உள்ளன.ஜமாபந்தியில் அளிக்கப்படும் மனுக்கள் மீது, 30 நாளில் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை அடிப்படையிலேயே பொதுமக்கள் ஒவ்வொருவரும் மனு அளித்துள்ளனர். ஒன்பது தாலுகாவிலும், தாலுகா வாரியாக ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் எவ்வளவு, தீர்வு காணப்பட்ட மனுக்கள், பரிசீலனையில் உள்ள மனுக்கள் எவ்வளவு; தீர்வு காணப்படாத மனுக்கள் இருப்பின் அதற்கான காரணங்கள் குறித்து, கலெக்டர் நேரடி ஆய்வு நடத்தவேண்டும். அவ்விவரங்களை அனைவரும் அறிந்துகொள்ளும்வகையில், அறிக்கையாக வெளியிடவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.வருவாய்த்துறை அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, ஜமாபந்தி மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்
மனுக்கள் தேக்கம்
பல்லடம் தாலுகாவில், சமீபத்தில் ஜமாபந்தி நடந்து முடிந்தது. ஜமாபந்தியில் மனு கொடுத்தால் உடனுக்குடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்தனர். தற்போது வருவாய் துறையினர் இரண்டு ஏக்கருக்கு மேல் உள்ள பூமி தான இயக்க நிலங்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். இதனால் ஜமாபந்தியில் கொடுத்த மனுக்கள் மீதான நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனு கொடுத்த மக்களுக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். இதில், தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல,' என்றனர்.