திருப்பூர்;திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தையல் கட்டண உயர்வு வழங்க சம்மதித்ததால், நான்கு நாட்களாக தொடர்ந்த பவர்டேபிள் நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது; இன்று முதல் பவர்டேபிள் நிறுவனங்கள் வழக்கமான ஆடை தைக்கும் பணியில் ஈடுபடுகின்றன.உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஏராளம் உள்ளன. இந்நிறுவனங்கள், பனியன், ஜட்டி உள்ளாடை ரகங்கள், சீசனுக்கு ஏற்ற ஆடை ரகங்களை தயாரித்து, நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு அனுப்புகின்றன.திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, ஜாப்ஒர்க் அடிப்படையில், பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்துக்கொடுக்கின்றன. பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் - தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) பேச்சுவார்த்தை நடத்தி, பவர்டேபிள் நிறுவனங்களுக்கான தையல் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன. ஆக., 19 முதல் போராட்டம்
கடந்த 2022 ஒப்பந்தப்படி, நடப்பாண்டு கடந்த ஜூன் 6 முதல், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பவர்டேபிள் நிறுவனங்களுக்கு நடைமுறையிலிருந்து 7 சதவீதம் கட்டண உயர்வு வழங்கவேண்டும்.இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பதால், பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் கடந்த 19ம் தேதி முதல் போராட்டத்தில் இறங்கியது.திருப்பூர், அவிநாசி, புளியம்பட்டி, சக்தி, கோபி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 1,300 பவர்டேபிள் நிறுவனங்கள், இந்த போராட்டத்தில் இறங்கின. தவித்த நிறுவனங்கள்
திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து, தைப்பதற்கு துணி கட்டுகள் எடுத்துவருவது; தைத்த ஆடைகளை டெலிவரி கொடுப்பது நிறுத்தப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த பவர்டேபிள் நிறுவனங்களின் போராட்டத்தால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடை ரகங்களை குறித்த காலத்துக்குள் வர்த்தகர்களுக்கு அனுப்பமுடியாமல் தவித்தன. பேச்சில் சுமூகத் தீர்வு
பவர்டேபிள் சங்கம் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் நேற்று சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து, பவர்டேபிள் நிறுவனங்கள், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளன.பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, ஒப்பந்தப்படி வழங்கவேண்டிய 7 சதவீத கட்டண உயர்வு வழங்காமல், திருப்பூரிலுள்ள பத்து மிகப்பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இழுத்தடித்து வந்தன. இதையடுத்து, பவர்டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டன.பவர்டேபிள் சங்கம் சார்பில், ஆடை உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒப்பந்தப்படி, கடந்த ஜூன் 6ம் தேதி முதலான ஆடை தயாரிப்புக்கு, 7 சதவீத கட்டண உயர்வு வழங்க ஒப்புக்கொண்டனர். அதனால், நான்கு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது; இனி, பவர்டேபிள் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும்.- முருகேசன், பொதுச்செயலாளர், பவர்டேபிள் உரிமையாளர் சங்கம்.