உடுமலை;மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, உழவு, விதை மற்றும் இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா வெளியிட்டுள்ள அறிக்கை:குடிமங்கலம் வட்டாரத்தில், 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் நடப்பாண்டு, குடிமங்கலம் வட்டாரத்தில், 600 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிறது.பருவ மழைக்கு முன், கோடை உழவு செய்வதால், மழை நீரை முழுமையாக சேமிக்கவும், மண் அரிப்பை தடுத்து, மண் வளம் பெருக்குவதோடு, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரித்து, நுண்ணுயிரினங்களின் பெருக்கத்திற்கு உதவுகிறது.மண்ணிலுள்ள தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், பூச்சிக்கூடுகளை அழித்து, இதன் வாயிலாக பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை குறைக்க முடியும்.கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, ரூ.500 ரூபாய் மானியமும், சாகுபடிக்கு தேவையான சோளம், கம்பு, உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட விதைகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், உழவன் செயலி வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.