திருப்பூர் : கோடங்கிபாளையம் கல்குவாரியில், அதிக கனிமவளங்கள் எடுக்கப்பட்டது மற்றும் வெடி பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு, கனிமவள துணை இயக்குனர் பரிந்துரைத்துள்ளார்பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் கிராமத்தில், 8.29 ஏக்கர் பரப்பளவிலும்; 13.71 ஏக்கர் பரப்பளவிலும், ஒரேநபருக்கு சொந்தமான இரண்டு கல்குவாரிகள் உள்ளன. இவற்றில், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், அனுமதியில்லாத வெடி பொருட்கள் பயன்படுத்தியதாகவும், விஜயகுமார் என்கிற விவசாயி, கடந்த 2021, செப்., மாதம், கனிமவளத்துறை இயக்குனரிடம் புகார் அளித்தார்.இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டது. குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வில், சட்டவிரோதமாக அதிக கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டது உறுதியானது; அந்த குவாரிக்கு, 10.4 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அனுமதித்ததைவிட அதிக கனிம வளங்களை வெட்டியெடுத்ததோடு, அதிக வெடி பொருட்கள் பயன்படுத்திய கல்குவாரி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி, விவசாயி விஜயகுமார் பத்து நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிமவளம் சுரண்டப்பட்ட நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாகவே, 10.4 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை, 100 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்; குவாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கடந்த 2ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோடங்கிபாளையம் குவாரி மீது போலீஸ் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கனிமவளத்துறை துணை இயக்குனர் பெருமாள், போலீஸ் எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கனிமவள துணை இயக்குனரின் பரிந்துரையின் அடிப்படையில், குவாரி நிர்வாகம் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.