உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிப்பு; நல வாரிய பதிவு மறுப்பு கட்டுமானத் தொழிலாளர் பிரச்னைகள் ஏராளம்

ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிப்பு; நல வாரிய பதிவு மறுப்பு கட்டுமானத் தொழிலாளர் பிரச்னைகள் ஏராளம்

திருப்பூர்;கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவரிடம், தொழிற்சங்க பிரதிநிதிகள், பிரச்னைகளை கொட்டித்தீர்த்தனர். கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமை வகித்தார்.தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தில்குமரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.கட்டுமான தொழிற் சங்க பிரதிநிதிகள், நலவாரியம் சார்ந்த கோரிக்கைகள், உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசினர். சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.,):நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலளர்களுக்கு விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ, உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவ சிகிச்சை பெற நிதியுதவி வழங்கப்படுவதில்லை. கட்டுமான தொழிலாளர் மருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக, இ.எஸ்.ஐ.,-ல் சேர்க்கவேண்டும். மாத ஓய்வூதியத்தை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மகளிர் உரிமை தொகை பெறுவதை காரணம்காட்டி, ஓய்வூதியம் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. சம்பத் (சி.ஐ.டி.யு.,): ஒரு தொழிலாளி பத்து ஆண்டுகளுக்கு முன் பி.எப்.,- ல் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, வீட்டில் மெஷின்களை வைத்து தையல் ஜாப்ஒர்க் செய்து வருகிறார். பத்து ஆண்டுக்கு முன் பி.எப்.,-ல் சேர்க்கப்பட்டதை காரணம்காட்டி, அவரை நலவாரியத்தில் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. நலவாரிய அதிகாரிகள், விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தவறுகளையும் ஆராய்ந்து ஒரே முறை தெரிவிப்பதில்லை. திருத்தம் செய்தது சமர்ப்பித்தபின், அடுத்தடுத்த தவறுகளை சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், வீண் காலதாமதமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.வாக்குவாதத்தால் சலசலப்பு---------------------தொ.மு.ச., பிரதிநிதி கிருஷ்ணசாமி பேசுகையில், ''நலவாரிய சர்வர் சிறப்பாக செயல்படுகிறது. இ.எஸ்.ஐ.,-ல் கட்டுமான தொழிலாளரை எவ்வாறு இணைக்க முடியும்; தொழில்முனைவோர் தரப்பில் யார் காப்பீட்டு தொகை செலுத்துவது?,'' என்றார். இதற்கு, மற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் ஒருசேர எழுந்து நின்று, 'எங்கள் கேள்விகளுக்கு நலவாரிய தலைவர் தான் பதிலளிக்க வேண்டும். பதில் சொல்ல நீங்கள் யார்? உங்கள் அரசை குற்றம் சொல்வதால் நீங்கள் இப்படி பதில் சொல்லாதீர்கள்,' என வாக்குவாதம் செய்தனர். இதனால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது.நலவாரிய குழு உறுப்பினர் குமார்: கடந்தாண்டு அளித்த வாக்குறுதிப்படி, நடப்பாண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் தீபாவளி போனஸ் பெற்றுத்தர நலவாரிய தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் நேரடியாக பேசவேண்டும்.இவ்வாறு, தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசினர்.----திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில்,கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம், கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் நடந்தது.

'தப்பிய' பெண் ஊழியர்

ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க பிரதிநிதி சிவசாமி பேசும்போது, ''மூத்த நலவாரிய உறுப்பினர் ஒருவரின் ஓய்வூதிய ஆணையை பெற நலவாரிய அலுவலகத்துக்கு சென்றேன். பெண் ஊழியரோ, என்னிடம் ஓய்வூதிய ஆணையை வழங்க மறுத்துவிட்டார். நான் பொய் சொல்லவில்லை; என்னிடம் ஆதாரம் உள்ளது,'' என்றார்.டென்ஷனான நலவாரிய தலைவர் பொன் குமார், அந்த பெண் அலுவலரை அழைத்தார். 'ஏம்மா அவர் சொல்வது உண்மைதானா; பேர் என்ன; எந்த ஊரு. இங்கு பணிபுரிய விருப்பமில்லையா,' என கடிந்து கொண்டு, ஊழியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் பேசினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், 'நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், நலவாரிய அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். உடனே நலவாரிய தலைவர், 'நலவாரியத்தினர் தொழிலாளரை உதாசீனப்படுத்தக்கூடாது அல்லவா? அதற்கான ஒரு மிரட்டல்தான். அனைவரும் கேட்டுக்கொண்டதால், பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை,' என்றார்.

3 ஆயிரம் பேருக்கு வீடு

கட்டுமான தொழிலாளர் 3,415 பேருக்கு, 1 கோடியே 4 லட்சத்து 71,600 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கி நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது:நலவாரிய திட்டங்களில் பயனாளியாக இணைவதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள், மூவாயிரம் பேருக்கு வீடு கட்டிக்கொடுக்க முனைப்பு காட்டிவருகிறோம். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் மருத்துவ வசதி பெறுவதற்கு, இ.எஸ்.ஐ.,க்கு மாற்றாக வேறு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்தான் வழங்கப்பட்டு வருகிறது; அந்த தொகை உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை. எனவே, நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை கட்டாயம் ஓய்வூதியத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ