உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேர் வாடல்; விவசாயிகள் வாட வேண்டாம் துவக்கத்தில் கண்டறிந்தால் தென்னையைக் காக்கலாம்

வேர் வாடல்; விவசாயிகள் வாட வேண்டாம் துவக்கத்தில் கண்டறிந்தால் தென்னையைக் காக்கலாம்

திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், வேளாண் துறை சார்பில், தென்னையை தாக்கும் நோய்கள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி தென்னை மரங்களில் கேரள வேர்வாடல் நோய் பரவுகிறது. இந்த நோய் தாக்கத்துக்கு பைட்டோ பிளாஸ்மா என்ற நுண்ணுயிரியே காரணியாக உள்ளது. மட்டைகளின் மேல் பகுதி மஞ்சள் நிறமாவது முதல் அறிகுறி.ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால், மரங்களை காப்பாற்றிவிடலாம். அடுத்தடுத்த நிலைகளில், ஓலைகளின் ஓரங்கள் கருகுவது, மரம் எலும்புக்கூடு போல் ஆவது என, நோய் தாக்கம் தீவிரமாகும். நுனி குருத்து அழுகல், பூங்கொத்து கருகுவது, குரும்பை உதிர்ந்து, காய்ப்பு திறனை இழக்கும்.நோய் பாதித்த முதல் இரண்டு நிலைகளுக்குள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, தென்னயை பாதுகாக்கமுடியும். மூன்றாவது, நான்காவது நிலைகளுக்கு சென்றுவிட்டால், காப்பாற்றுவது கடினம்; அத்தகைய மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதே நல்லது.இவ்வாறு, அவர் பேசினார்.

என்ன செய்ய வேண்டும்?

''ஒருங்கிணைந்த வாடல் நோய் மேலாண்மை மூலம், வேர்வாடல் நோய் பாதித்த தென்னைகளை காப்பாற்றலாம். மக்கிய சாண உரம் 50 கிலோ; வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ; பூரியா 1.3 கிலோ; சூப்பர் பாஸ்பேட் 2 கிலா; மூரியேட் ஆப் பொட்டாஷ் 3.5 கிலோ கலவையை, ஒரு மரத்துக்கு, ஓராண்டுக்கு வைக்கவேண்டும். ஒரு மரத்துக்கு டிரைகோ டெர்மா அஸ்பரெல்லம் - 100 கிராம்; பேசில்லஸ் சப்டிலிஸ் 100 கிராம்; அசோஸ்பைரில்லம் 100 கிராம்; பாஸ்போ பாக்டீரியா 100 கிராம்; வேர் உட்பூசணம் 50 கிராம் வீதம், மக்கிய தொழு உரத்துடன் சேர்த்து, வேர் பகுதியில் இடவேண்டும். 40 மி.லி., தென்னை டானிக்கை 160 மி.லி., தண்ணீரில் கலந்து வைக்கவேண்டும். உர நிர்வாகம் மூலம், மண்ணை வளப்படுத்துவது மிகவும் அவசியம்'' என்றனர் வேளாண் அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A P
ஜூலை 29, 2024 13:37

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது போல, பல விவசாயிகள் எவ்வளவு முட்டாள்களாக ஆக்கப் பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சாக்ஷி. இங்கு பிரசுரமாகியிருக்கிற படத்தில் தென்னை மரத்தின் பல வேர்கள், பூமிக்கு வெளியே ஆகாசத்தை பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு தவறு என்பது பலருக்கும் தெரியவில்லை. வேர் என்பது யார் கண்ணுக்கும் புலப்படாமல், பூமிக்குள் புதைந்து இருந்து மண்ணிலிருந்து சத்துக்கள் மற்றும் தேவையான நீரையும் மரத்துக்கு தரவேண்டும். பூமிக்கு மேல் வேர் தெரிகிற எந்த பயிரும் பலன் கொடுக்காது என்பதை இனியாவது அந்த பலரும் புரிந்துகொண்டால் சரி.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை