| ADDED : மே 06, 2024 11:14 PM
திருப்பூர்;ஒழுங்குமுறை விற் பனைக் கூடத்தில் பல கடைகள் காலியாக இருக்கும் போது, லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து புதிய கடைகள் கட்டப்பட்டது, தனி நபர்கள் பணம் சம்பாதிக்க வழி ஏற்படுத்தியுள்ளது என, நுகர்வோர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து, நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் கடித விவரம்:திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், 11.35 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில், கடைகள் மற்றும் குடோன்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது அங்கு தற்காலிகமாக திருப்பூர் தினசரி மார்க்கெட் கடைகள் செயல்படுகிறது. இதேயிடத்தில், தற்காலிகமாக செயல்பட்ட பூ மார்க்கெட் கடைகள், புதிய கட்டடம் கட்டித் திறந்த பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது.இருப்பினும், விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகளை கடை திறக்க வைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். தனி நபர்கள், கடைக்கு வைப்புத்தொகை என்ற பெயரில் வசூலிக்கும் விதமாக, தற்போது இந்த வளாகத்தில், 35 லட்சம் ரூபாய் செலவில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.ஏற்கனவே, இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் காலியாக உள்ள நிலையில், புதிதாக, 20 கடைகள் கட்ட என்ன அவசியம், இதனை எப்படி நிர்வாகம் அனுமதித்தது என்று தெரியவில்லை. இந்த வளாகத்தில், பயன்பெறும் வகையில் கடைகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றால், தெற்கு உழவர் சந்தையில் இடப்பற்றாக்குறையால் சிரமப்படும் விவசாயிகளுக்கு இங்கு இடம் தரலாம். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உரிய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.