திருப்பூர்:பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு சப்ளை செய்ய கடத்தி வரப்பட்ட, 426 கிலோ குட்கா மற்றும் மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாநகரில் கஞ்சா, குட்கா உட்பட போதை பொருட்களின் புழக்கம் தொடர்பாக, போலீசார், உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் கொடிகம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்து வந்த நபரை கைது செய்து, 124 கிலோ பறிமுதல் செய்து, வீட்டுக்கு 'சீல்' வைத்தனர்.இதனையடுத்து, பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு மொத்த விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்ய சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வருவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகைக்கு தகவல் கிடைத்தது. இதனால், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, செங்கப்பள்ளி அருகே பைபாஸ் ரோட்டில் சந்தேகப்படும் விதமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், குட்கா மூட்டைகள் இருப்பது தெரிந்தது. உடனே, தனிப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில், போலீசாரும் விரைந்தனர்.விசாரணையில், சதீஷ்பாபு, 35, முருகன், 38, பரமசிவம், 30, இளையராஜா, 32 மற்றும் குரு, 29 என்பதும், அடிக்கடி பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு வாகனங்கள் வாயிலாக, குட்கா கடத்தி விற்பதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 426 கிலோ குட்கா, மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து, ஐந்து பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த திலீப்பை பிடிக்க தனிப்படையினர் விரைந்தனர். ---கைப்பற்றப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மொத்த விற்பனையாளருக்கு 'செக்'
போலீசார் கூறியதாவது:குட்கா பதுக்கல், விற்பனை தொடர்பாக சில்லறை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த பட்சத்தில், புதியதாக வந்த கமிஷனர், குட்கா, கஞ்சா விஷயத்தில் எவ்வித பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து, குட்கா மொத்த விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால், கடந்த சில நாட்களாக மொத்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட, ஐந்து பேரில், முருகனுக்கு, 226 கிலோ மற்றும் சதீஷ்குமாருக்கு, 200 கிலோ சப்ளை செய்ய இருந்தது தெரிந்தது. குட்கா விற்றது தொடர்பாக ஏற்கனவே முருகன் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் செய்த காரணத்தால், 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், கைது செய்யப்பட்டார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.