| ADDED : ஜூன் 05, 2024 11:04 PM
திருப்பூர்: ''பள்ளிகளுக்கு 98 சதவீத புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன'' என, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மே இரண்டாவது வாரம் முதல் பாடநுால் கழகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒன்றியம் வாரியாக புத்தகங்கள் பிரிக்கப்பட்டு, இடுவம்பாளையம், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட எட்டு பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.பள்ளிகள் திறப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பே புத்தகங்கள் பள்ளிக்கு சென்று சேர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதால், மே, 22 முதல் புத்தகங்கள் பள்ளிக்கு அனுப்பும் பணி துவங்கியது. பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படுமென அறிவிப்பு வெளியானதால், புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி சுறுசுறுப்படைந்தது. இரண்டாம் கட்டமாக, மே, 31க்குள், 80 சதவீத புத்தகங்கள் பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன.வெயில் காரணமாக கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம் கூறுகையில்,' பள்ளி திறப்பு (ஜூன், 5 ம் தேதி) நாளுக்கு முன்பாகவே திட்டமிட்டு, புத்தகங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.வகுப்பு வாரியாக புத்தகங்களை பிரிக்கும் பணி நிறைவு பெற்று விட்டது. 10ம் தேதி பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும்,' என்றார்.