திருப்பூர்:ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, வரும் 12ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.வரும் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகம், வேளாண் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஒரே விண்ணப்பம் வழியாக, இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள, 14 இளமறிவியல் பாடப் பிரிவுகளுக்கு, 5 ஆயிரத்து 361 இடங்களுக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கு 371 இடங்களுக்கும் மற்றும் வேளாண் பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கு 340 இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடைபெறும்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும்வேளாண், தோட்டக்கலை,வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கு, ஆயிரத்து 290 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.வேளாண் பல்கலைக்கழகத்தின்,http://tnagfi.ucanapply.comஎன்ற இணையதளம் வாயிலாக, மே 7ம் தேதி முதல் இந்த ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, இன்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 26 ஆயிரத்து 357 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 16 ஆயிரத்து 289 மாணவியர், 10 ஆயிரத்து 68 பேர் மாணவர்களிடம் இருந்து, பட்டயப் படிப்பிற்கு 2 ஆயிரத்து 428 விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் வரை பெறப்பட்டுள்ளன.இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு,tnau.ac.inஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும், 94886- 35077, 94864 -25076 ஆகிய மொபைல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.