உடுமலை;பாலக்காட்டு கணவாயில், காற்று சீசன் முன்னதாகவே துவங்கியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, பாலக்காட்டு கணவாய் காற்றை ஆதாரமாக கொண்டு, உடுமலை, பல்லடம், கேத்தனுார், ஒத்தக்கால்மண்டபம், அணிக்கடவு, தேனி உள்ளிட்ட பகுதிகளில், 5,438 மெகாவாட் திறனுள்ள, 4,300 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இப்பகுதிகளில், ஜூன் முதல், செப்.,வரை காற்று சீசன் காலமாகவும், மின் உற்பத்தி அதிகரிக்கும் காலமாகவும் உள்ளது. தற்போது ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில், காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு, 12 முதல், 14 மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.கடந்த வாரம், காற்றாலைகள் வாயிலாக, 1,448 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், காற்றின் வேகமும், மின் உற்பத்தியும் அதிகரித்து, நேற்று அதிக பட்சமாக, 1,795 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'ஜூன் மாதம் காற்று சீசன் துவங்கி, படிப்படியாக அதிகரிக்கும். ஆக., மாதத்தின் மத்தியில் உச்ச அளவாக, 2,600 மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி இருக்கும்.தற்போது, ஜூலை மாதமே காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் உச்ச அளவாக, நேற்று, 1,795 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால், நடப்பு சீசனில் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவு இருக்கும்,' என்றனர்.