திருப்பூர்;மாணவ, மாணவிகள் விளையாட்டுப் பயிற்சி பெற நகர்ப்புறங்களிலாவது ஓரளவு விளையாட்டு மைதான வசதியுள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் தான் விளையாட்டு கட்டமைப்பு குறைவாக இருக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சில கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் பயனற்று கிடக்கின்றன.கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியர், விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து ஊராட்சிகளிலும், 'நம்ம ஊரு விளையாட்டு திடல்' அமைக்கப்படும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு புதிதாக இருந்தாலும், செயல் பழையது தான். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 528 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில், 64.35 கோடி ரூபாய் மதிப்பில், 'அம்மா' விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. அங்கு, கபடி, கைப்பந்து, கிரிக்கெட், பால்பேட்மின்டன் உட்பட பல்வேறு விளையாட்டுக்குரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இடம் தேர்வு செய்தனர். இடமில்லாத உள்ளாட்சிகளில், அங்குள்ள ஏதாவது ஒரு பள்ளியில் மைதானத்தில், விளையாட்டு திடல் கட்டமைப்பு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.தேவையான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. ஆனால், சில நாட்களிலேயே அதன் செயல்பாடு முடங்கியது; மைதானம் பயனற்று போனது. இந்நிலையில், அதே திட்டத்தை துாசு தட்டுவது போன்று, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் அறிவிப்பு உள்ளது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது,உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:ஏற்கனவே, நிதி நெருக்கடியில் திணறி வரும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மைதான பராமரிப்பு மற்றும் விளையாட்டு உபகரணம் வாங்க நிதி திரட்டுவது என்பது, சிக்கலான விஷயமாகவே இருந்தது. விளையாட்டு மைதானங்களை பராமரிக்க, தேவையான விளையாட்டு உபகரணம் வழங்க நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை, தனியார் கிளப் உள்ளிட்ட அமைப்பினருக்கு வழங்கலாம். மைதானத்தை சிறப்பாக பயன்படுத்தி, போட்டிகளில் பங்கெடுத்து பரிசு வெல்லும் அளவுக்கு வீரர்களை உருவாக்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.