திருப்பூர்:''தொழில்துறைக்கு மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம், விளையாட்டு துறைக்கும் பல முக்கியமான பங்களிப்பை அளித்து, பெருமை சேர்த்து வருகிறது,'' என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசினார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், தமிழகம் முழுவதும், 12,618 ஊராட்சிகளில் விளையாட்டு வீரர், வீராங்கனையருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சிகளை சேர்ந்த, 410 விளையாட்டு வீரர்களுக்கு, 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திருப்பூர் அங்கேரிபாளையத்தில் நேற்று நடந்தது.அமைச்சர்கள் மகேஷ், சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய லோகோவை வெளியிட்டும், விளையாட்டு உபகரணங்களையும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:கிரிக்கெட், கால்பந்து உட்பட, 33 வகையான விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்கள்வழங்கப்படுகிறது.தொழில் துறைக்கு மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம், விளையாட்டு துறைக்கும் பல முக்கியமான பங்களிப்பை அளித்து, பெருமை சேர்த்து வருகிறது.கேலோ இந்தியாவில், தமிழகம், இரண்டாம் இடம் பிடித்தது. இந்தியாவிலேயே விளையாட்டு துறை என்றால், அது தமிழகம் தான் என்று சொல்லும்படி பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விளையாட்டு, நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும்.அதற்கு, இங்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் பயன் அளிக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் அரசின் முகமாக இருந்து சாதிக்க வேண்டும். தாராபுரத்துக்கு விளையாட்டு மைதானம் வேண்டும் என்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கோரியுள்ளார்.வரும் சட்டசபை கூட்டத்தொடரில், அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். லோக்சபா தேர்தலில், 40க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம். எனவே, ஒவ்வொரு தொகுதிக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கும், இந்த அரசுக்கும் உண்டு.இவ்வாறு அவர் பேசினார். இருவருக்கு கவுரவம்
முன்னதாக, மேடையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அருகே ஒலிம்பியன் தருண் அய்யாசாமி, கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற பிரவீனா ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டு, சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
புகழ் பாடிய அமைச்சர்
முன்னதாக பள்ளி கல்விதுறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் என்ன வேண்டும் என்று நன்கு அறிந்தவர் அமைச்சர் உதயநிதி. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மேடைக்கு வரும் போது கோரிக்கை என்று சொல்லி கொண்டு வந்தார். அவரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். பள்ளி கல்விதுறை அமைச்சராக எனக்கு மிகுந்த பெருமை. அப்பா மாதம், மாதம் ஆயிரம், ஆயிரமாக கொடுக்கிறார். அவரது பிள்ளை லட்சம், லட்சமாக கொடுக்கிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.