| ADDED : ஜூலை 02, 2024 12:20 AM
திருப்பூர்:வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், சீரங்கராயகவுண்டன்வலசு ரோடு பகுதியில் உள்ள ஆர்.பி.எஸ்., மஹாலில் நடந்து வரும் புத்தக கண்காட்சி நடைபெற்று யில், எழுத்தாளர் சுமதி பேசியதாவது;கல்வி என்பது ஆணவம், சொத்து, திமிர், பணம் போன்றவை அல்ல. எப்போது நாம் துன்பத்தில் இருக்கிறோமோ, அதை சரி செய்து, நம்மை தகவமைத்து கொள்வதும்; நம்மை சுற்றியுள்ளவர்களின் துன்பத்தை போக்க முயற்சிப்பதும் தான் கல்வியின் பயன். நம் தேசத்திற்கு எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ, அப்போதெல்லாம், அந்த துயர் துடைப்பதற்கு துாணாக நின்று காப்பாற்றுவது தான் கல்வியின் இறுதிப்பயனாக இருக்க முடியும்.இளைஞர்கள் எடுக்கும் முடிவு, வேகத்தில் முடிகிறது; எந்த வேலையையும் செய்யக்கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்போது, அந்த தொழில் அல்லது அது சார்ந்த முன்னேற்றம் பெற, ஆயிரம் யோசனைகள் வரும். 'இலக்கை நாம் அடைந்து விட்டோம்' எனக் கூறுவதல்ல வெற்றி. ஒரு செயலை நோக்கி, ஒரு இலக்கை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருப்பது தான், உண்மையான வெற்றி. வாழ்க்கை என்பது, ஒன்றை அடைந்துவிட்டோம் என்பதல்ல; வாழ்க்கை பயணத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளித்து, தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோமே; அதுதான் வாழ்க்கைக்கான வெற்றி. பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் என்பது தான், கல்வி தரும் பயன். இந்த கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.