உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் வேணுங்க; காலி குடங்களுடன் போராட்டம் பழையூர் கிராம மக்கள் ஆவேசம்

குடிநீர் வேணுங்க; காலி குடங்களுடன் போராட்டம் பழையூர் கிராம மக்கள் ஆவேசம்

உடுமலை;குடிநீர் பிரச்னையை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தைக்கண்டித்து, பழையூர் கிராம மக்கள், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்டது பழையூர் கிராமம். கிராமத்துக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இத்திட்டத்தில், பற்றாக்குறையாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது; உள்ளூர் நீராதாரமான போர்வெல்லில் இருந்தும், பல வாரங்களில், தண்ணீர் வழங்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று அக்கிராம மக்கள், காலிக்குடங்களுடன், குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, மக்கள் கூறியதாவது: பழையூர் கிராமத்துக்கு, பல வாரங்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை. தட்டுப்பாடு நிலவுவதால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.கிராமத்திலுள்ள போர்வெல் பழுதடைந்து, நீண்ட நாட்களாகியும் சீரமைக்கவில்லை. ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர் போர்வெல்லை சீரமைத்து விட்டதாக கணக்கு மட்டும் காட்டி வருகின்றனர்.பல முறை மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தொக்க தொட்டி எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது.அடிப்படை பராமரிப்பு பணி கூட மேல்நிலைத்தொட்டியில் மேற்கொள்வதில்லை. புகார் தெரிவித்தால், ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர்.ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்படுகின்றனர்.கூட்டுக்குடிநீர் திட்டத்தில், முறையாக குடிநீர் பெற்று வினியோகிக்க வேண்டும்; போர்வெல் மற்றும் மேல்நிலைத்தொட்டியை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடர்வோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.மேலும், காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.'கிராமத்திலுள்ள போர்வெல்லுக்கு புதிதாக மோட்டார் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்; இதர பிரச்னைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என ஒன்றிய அதிகாரிகள் மக்களிடம் உறுதியளித்தனர்.இதையடுத்து பழையூர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தால் ஒன்றிய அலுவலகத்தில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை