உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது?

தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா எப்போது?

திருப்பூர்;பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று, மூன்றாவது முறையாக திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற உதவிய தலைமை ஆசிரியர்களுக்கு எப்போது பாராட்டு விழா என்ற எதிர்பார்ப்பு கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவில், 97.45 சதவீத தேர்ச்சியுடன், மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டம் அசத்தியது. இது தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகளின் உழைப்புக்கு பெரும்பலன் கிடைத்ததாக கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினர். அத்துடன், 'நம் மாவட்டம் முதலிடம் பெற உதவிய தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்,' எனவும் அறிவித்தார்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 10ல் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாகிய நிலையில், 100 சதவீதம் தேர்ச்சி பெற உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா குறித்து, எந்த தகவலும் இல்லை. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என கையை பிசைகின்றனர்.

சி.இ.ஓ., வருவது எப்போது?

மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கீதா, மே, 31 ம் தேதி பணி ஓய்வு பெற்றார். மாவட்ட கல்வி அலுவலராக இருந்த பக்தவச்சலத்துக்கு, கூடுதல் பொறுப்பாக முதன்மை கல்வி அலுவலர் பணி வழங்கப்பட்டது.உடல் நிலை காரணமாக இவர் மருத்துவ விடுப்பில் செல்ல, கோவை சி.இ.ஓ., பாலமுரளி, திருப்பூர் மாவட்ட கல்வித்துறையையும் சேர்த்து கவனித்து வருகிறார்.கல்வியாண்டு துவங்கி, ஒன்றரை மாதமாகிய நிலையில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை, கல்வி வளர்ச்சி பணிகளை மீளாய்வு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட துவங்கியுள்ளது. தலைமை ஆசிரியர் பாராட்டு விழா முடிவு செய்யப்படாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு விரைந்து திருப்பூர் மாவட்டத்துக்கு முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை