உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 45 நாள் பேமென்ட் நடைமுறை திருப்பூருக்கு நன்மை பயக்கும்

45 நாள் பேமென்ட் நடைமுறை திருப்பூருக்கு நன்மை பயக்கும்

திருப்பூர்:'புதிய வருமானவரி சட்டத்தை, தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்,' என, திருப்பூர் குறு, சிறு தொழில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில், ஒவ்வொரு 'ஜாப் ஒர்க்' சேவையும் அவசியம். குறு, சிறு தொழில் நடத்துவோர், உற்பத்தி மற்றும் சேவைக்கான கட்டணத்தை, குறித்த காலத்தில் பெற முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து, உற்பத்தி நிறுவனம், தனது 'ஜாப் ஒர்க்' சேவைக்கான கட்டணத்தை, 45 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், கட்டண தொகையை, செலவு கணக்கில் காட்ட முடியாது. மாறாக, செலுத்தப்படாத கட்டண தொகையை லாபமாக கருதி, வருமானவரி விதிப்பு செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.திருப்பூர் பின்னலாடை குறு, சிறு தொழில் அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன், நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தனர்.குறு, சிறு தொழில்களுக்கான, உற்பத்தி மற்றும் சேவைக்கான கட்டணத்தை, 45 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டியது சட்டமாகியுள்ளதை வரவேற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.'நிட்மா' தலைவர் ரத்தினசாமி கூறுகையில்,''குறு, சிறு தொழில்களுக்கு, 'பில்' தொகை குறித்த நேரத்தில் கிடைக்காதது பெரும் பிரச்னையாக இருந்தது. புதிய சட்ட அறிவிப்பால், அனைத்து வகை 'பில்' தொகையும், ஒப்பந்தம் வாயிலாக, 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். மத்திய அரசு அறிவிப்பு, ஒட்டுமொத்த திருப்பூருக்கும் நன்மை அளிக்கும். எனவே, புதிய சட்டத்தை தாமதமின்றி அமல்படுத்திட வேண்டுமென, மத்திய அரசை வலியுறுத்துவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை