உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரோட்டில் இடையூறு செய்யும் கால்நடைகள்: கண்டுகொள்ளாத நகராட்சி 

 ரோட்டில் இடையூறு செய்யும் கால்நடைகள்: கண்டுகொள்ளாத நகராட்சி 

உடுமலை: நகரில், கட்டுப்பாடு இல்லாமல், சுற்றித்திரியும் கால்நடைகளால், மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தும், நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். உடுமலை நகரில், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் பிரதான ரோடுகளிலும் வலம் வருகின்றன. குறிப்பாக, உழவர் சந்தை, ராமசாமி நகர், கிரீன்பார்க் லே-அவுட், அரசு கலைக்கல்லுாரி ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பல ரோடுகளில், 50க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடு உள்ளிட்டவை கால்நடை வளர்ப்பவர்களால் மேய்ச்சலுக்கு விடப்படுகிறது. அக்கால்நடைகள், ரோட்டை மறித்து நடந்து செல்வதுடன், வாகனங்களில் செல்பவர்களை தாக்கவும் முயற்சிக்கின்றன. மாலை நேரங்களில், ரோட்டில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. நகரப்பகுதியில், கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். முதற்கட்டமாக அபராதம் விதிப்பதுடன், ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான செலவினங்களை கால்நடை வளர்ப்போரிடம் வசூலிக்க வேண்டும். இத்தகைய விதிமுறைகள் இருந்தாலும், உடுமலை நகராட்சி நிர்வாகத்தினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களை அதிருப்தியடைய செய் துள்ளது. அசாம்பாவிதம் ஏற்படும் முன் விதிமுறைகளை மீறி, ரோட்டில் திரியும் கால்நடைகளை கண்டறிந்து, அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். நகரில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள், பல விதமான கழிவுகளை உட்கொள்கின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகளை அவை உட்கொள்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இயல்பான தீவனம் இல்லாமல் ரோட்டோரத்தில், மேய்ச்சலுக்கு விடப்படுவதால், கால்நடைகளுக்கும் ஆபத்து என்பதை கால்நடை வளர்ப்போர் உணர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை