கடந்தாண்டு டிச., மாதம் 5 முதல், 14ம் தேதி வரை, ஹிமாச்சல பிரதேச மாநிலம், குலுமணாலி, வாஜ்பாய் மலையேற்ற கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில், தேசிய மலையேற்ற சாகச முகாம் நடந்தது.இதில், கோவை பாரதியார் பல்கலை அளவில் பங்கேற்ற மாணவர்களில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஆங்கில இலக்கிய பிரிவு மாணவர் சக்தியும் ஒருவர்.மாணவர் சக்தி, நம்மிடம் பகிர்ந்தவை...இங்கு பனியை கண்களால் தான் பார்க்க முடியும். ஆனால், ஹிமாச்சல பிரதேசத்தில், கையில் எடுத்து, விளையாடும் அளவு பனி பொழிந்தது.முதல் நாள் மலையேற்றம், நதி கடக்கும் சாகசம், செங்குத்தான பாறைகளில் இருந்து கயிறு கட்டி இறங்குதல், தொடர்ந்து 'ட்ரெக்கிங்', மலையில் மாட்டிக் கொள்பவர்களை மீட்கும் பயிற்சி என கடும் சவாலாக இருந்தது.பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவியர் வந்திருந்தாலும், ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து மலையேறினோம். இமயமலைத் தொடரில் பனியில் விளையாடிய அனுபவத்தை மறக்கவே முடியாது.ஒரு குழுவுக்கு எப்படி தலைமை வகிப்பது, நிர்வாகிப்பது, புரிதல், திறன் வளர்த்தலை கற்றுக் கொள்ள முடிந்தது. குளிர்ந்த, மலைப்பாங்கான பகுதியில், 30 கி.மீ., நடைபயணம், கடல்மட்டத்தில் இருந்து, 6000 அடி உயரத்துக்கு மேல் தட்பவெப்ப நிலை புதிய அனுபவத்தை உணர செய்தது.'மைனஸ்' நான்கு டிகிரி குளிர் பதிவாகிய போது, ஐந்து ஸ்வெட்டர் அதற்கு மேல், ஒரு சட்டை போட்டு இருந்தோம். ஆனால், உடற்பயிற்சி என்றால், 'டக்'கென தயாராகி விடவேண்டும். இப்பயணம் புதுமையான பல அனுபவங்களை கற்றுத்தந்தது; நாடு முழுதும் புதிய நண்பர்களை பெற முடிந்தது.என் பயண அனுபவங்களுக்கு கல்லுாரி முதல்வர் நளதம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தாரணி, உதவி அலுவலர் பாலமுருகன் மற்றும் எங்கள் பேராசிரியர்கள் மிகுந்த ஊக்கமளித்தனர்.இவ்வாறு சக்தி கூறினார்.மத்திய அமைச்சர் எளிமைசக்தி கூறியதாவது:மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.எங்கள் அறைக்குள் வந்த அவர்,' ஹாய் எப்படி இருக்கீங்க' என பேச துவங்கியவர், 'எங்கள் மாநிலத்தில் (ஹிமாச்சல பிரதேசம்) குளிர் அதிகமா?' என கேட்டார். 'ஆமாம்' எனக்கூறிய போது, 'இன்னும் சில நாட்கள் இருந்து பார்க்கிறீர்களா?' என ஜாலியாக கேட்டார்.புறப்படுவதற்கு முன் 'வேறு எங்காவது பயணிக்க விரும்புகிறீர்களா?' என கேட்டார். எங்களில் ஒரு மாணவர், 'இந்தியா கேட், ராஜபாட்டை' எனக்கூற, காரை வர சொல்லி, டிரைவரை அனுப்பி, சுற்றிக்காட்டி விட்டு, 'பத்திரமாக அழைத்து வந்து விடுங்கள்' என அக்கறையுடன் கூறி அனுப்பி வைத்தார். மத்திய அமைச்சரின் எளிமை எங்களை நெகிழச்செய்தது.