திருப்பூர்: உலகளாவிய பேஷன் துறையில் நிகழப்போகும் மாற்றங்களை, திருப்பூர் பின்னலாடை துறையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார், ஸ்டார்ட் அப் இந்தியா ஆலோசகர் ஜெய்பிரகாஷ். இது குறித்து, அவர் கூறியதாவது: உலகளாவிய பேஷன் துறை, 2026ம் ஆண்டுக்கு பின், மிகப்பெரிய மாற்றங்களோடு பயணிக்க உள்ளது. நுகர்வோர் மனநிலை மாற்றம், ஏ.ஐ.-ன் வேகமான எழுச்சி என எல்லாமும், பேஷன் துறையை முழுமையாக மறு பிறவி எடுக்க வைக்கிறது. குறிப்பாக, பேஷன் துறையில் பத்து மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளன. இந்த மாற்றங்களை கண்டு, திருப்பூர் தொழில்முனைவோர் அச்சப்பட தேவையில்லை. அடுத்த பத்து ஆண்டுகாலம் வெற்றிகரமாக பயணிப்பதற்கு, இதுவே சரியான தருணம். நாற்பது சதவீத பேஷன் தலைவர்கள், 2025ம் ஆண்டைவிட, 2026ம் ஆண்டு மோசமாக இருக்கும் என்கின்றனர். அமெரிக்காவின் வரி உயர்வால், அனைவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா, எச்சரிக்கையுடன் பணத்தை செலவு செய்கிறது. சீனாவில், ஒரே சீரான நிலை தொடர்கிறது. அமெரிக்க வர்த்தகர்கள், சீனாவுக்கு மாற்றாக, நம்பகமான, விரைவான உற்பத்தி, கட்சிதமான தரம், நீடித்த நிலைத்தன்மை, காம்ப்ளயன்ஸ் ஆகிய ஐந்து அம்சங்களை கொண்ட உற்பத்தி மையத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஐந்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் ஒரே நகரம், திருப்பூர் தான். திருப்பூர் ஏற்கனவே, ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பின்னலாடை ரகங்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. ஆர்கானிக், மறு சுழற்சி ஆடை தயாரிப்பு, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு திறம்பட மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர், ஏ.ஐ. தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பழைய டி-சர்ட்களை திரும்ப வாங்கவேண்டும். மறுசுழற்சி நுாலிழை தயாரிக்கவேண்டும். திருப்பூர் ஏற்கனவே, நாட்டின் முதன்மை மறுசுழற்சி பருத்தி ஆடை தயாரிப்பு மையமாக திகழ்கிறது. இன்னும் வளர்ச்சி அடைந்து, ஆசியாவில் முதன்மை நகராக மாறவேண்டும். உலக பேஷன் துறையில் மாற்றங்கள் நிகழப்போகிறது. இதனை சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறன் திருப்பூரிடம் உள்ளது. உலக பேஷன் விதிகள் மாறும் நேரம் இது; ஆனால், அந்த விதிகளை எழுதப்போகிறவர்கள் நாம்தான். இவ்வாறு, அவர் கூறினார்.