நீர்வழிப்பாதை கடந்து மயானம்
அவிநாசி: அவிநாசி நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு, மடத்துப்பாளையம் வினோபா வீதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறுகின்றனர். கட்டடத்திற்கு மதில் சுவர், கழிவறை வசதி, குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆகியன தேவை. கட்டடத்தை சுற்றி புதர் மண்டியுள்ளது. விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. மாலையில், சமூகவிரோதிகள் நுழைந்து மது குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். உரிய வசதிகள் கேட்டு சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் மனு அளித்தனர். அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்ல போதுமான சாலை வசதி, மின்விளக்கு வசதி தேவை. மழைக்காலங்களில், நீர் வழி பாதையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்பவர்கள் சேற்றில் சிக்கி உயிர் தப்பிய சம்பவங்களும், போதிய வெளிச்சம் இல்லாததால் விஷப் பூச்சிகள் கடித்து சிகிச்சை பெற்ற சம்பவங்களும் நடந்துள்ளது. மயானத்திற்கு செல்ல நீர்வழி பாதையில் உயர் மட்ட பாலம் அமைத்து தரவும், தெருவிளக்கு வசதி வேண்டியும் பொதுமக்கள் மனு அளித்தனர்.