திருப்பூர் : 'தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சருடன், அரசு அதிகாரிகள் செல்லக்கூடாது. பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தோ, மிரட்டியோ ஓட்டு கேட்கக்கூடாது,' என, தேர்தல் நன்னடத்தை விதிகளில் மாநில தேர்தல் கமிஷன் தெளிவுபுடுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது; அடுத்த மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வேட்பு மனுக்கள் கடந்த இரண்டு நாட்களாக பெறப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மதிவாணன், நன்னடத்தை விதிமுறைகள் குறித்த கையேட்டை நேற்று வெளியிட்டார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த அரசியல் கட்சியின் வேட்பாளரும் ஓட்டு வாங்கும் நோக்கத்தில் சாதி, இனம், மொழி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக்கூடாது. மாற்றுக்கட்சிகளின் கொள்கை, சாதனை, கோட்பாடு குறித்து பேசலாம். வெறும் குற்றச் சாட்டாக பேசக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கக் கூடாது.லஞ்சம் அல்லது வெகுமதி அளித்தல்; நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டல் விடுத்து சுதந்திரமாக ஓட்டுப்போடும் உரிமையில் குறுக்கிடக் கூடாது. சாதி, மத, மொழி, இன அடிப்படை யிலும், மதச்சின்னம், தேசிய சின்னம் ஆகியன பயன்படுத்தக் கூடாது. வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லக் கூடாது. கூட்டங்களில் மதுபானம், போதை பொருள் வழங்கக் கூடாது. போஸ்டர் மற்றும் நோட்டீஸ்களில் பிரின்டிங் பிரஸ் பெயர் இருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு முடிவடையும் 48 மணி நேரம் முன்னதாக பிரசாரங்கள் தடை செய்யப்படும். தனி நபர் கட்டடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. மற்ற வேட்பாளரின் பிரசாரத்தை தடை செய்யக்கூடாது. காலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தல் செலவு கணக்கை 30 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அரசு வாகனங்களை தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சர் உள்ளிட்ட யாரும் பயன்படுத்தக் கூடாது. பொதுக்கூட்டங்களை முறையாக அனுமதி பெற்று நடத்த வேண்டும். கூட்டத்தில் யாராவது பிரச்னை செய்தால் உரிய முறையில் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கூட்டம் நடத்த வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சர்களுடன், அரசு அதிகாரிகள் செல்லக்கூடாது. பாதுகாப்பு அதிகாரி தவிர வேறு யாரும் உடன் செல்லக்கூடாது. ஆளும்கட்சியினர், அரசு வாகனங்களை தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடாது. பயணியர் மாளிகைகளை தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது, என, பல்வேறு விதிமுறைகளை அரசு அதிகாரிகள், வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.தேர்தல் நாட்களில் அரசு செலவில் விளம்பரம் செய்தல் மற்றும் செய்தி தொடர்பு சாதனங்களை ஆளும் கட்சிக்கு ஆதரவாக பயன்படுத்த கூடாது. புதிய திட்டங்கள் அறிவிக்கவோ அடிக்கல் நாட்டவோ கூடாது. மானியங்கள் வழங்கவோ, அறிவிக்கவோ கூடாது. ரோடு போடுதல், குடிநீர் வசதி செய்து தருதல் போன்ற வாக்குறுதி தரக் கூடாது. அரசுப் பணி மற்றும் அரசு நிறுவனங்களில் நியமனம் செய்யக்கூடாது. அமைச்சராக ஓட்டுச் சாவடி மற்றும் எண்ணிக்கை மையத் துக்குள் நுழையக் கூடாது. ஏஜன்ட் மற்றும் வாக்காளர் என்ற அளவில் மட்டுமே நுழையலாம். உலக அளவிலான ஒப்பந்தப் புள்ளிகள் தவிர இதர ஒப்பந்தப் புள்ளிகள், தேர்தலுக்கு முன்பே கோரப்பட்டிருந்தால், தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்று முடிவு செய்யலாம். நடைமுறையில் உள்ள நலத்திட்டங்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்யக்கூடாது. நடத்தை விதிகள் அமலுக்கு முன்பே பயனாளிகள் கண்டறியப்பட்டு, நடைமுறையில் உள்ள பயனளிப்பு திட்டங்களை தொடரலாம். அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் நடத்தை விதிகளை மீறி, தண்டனைக்குள் ளானால், அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறுவோர் மீது, மாநில தேர்தல் கமிஷனுக்கு தகவல் அளித்து விட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட் டோர் உரிய குற்றவியல் வழக்கு தொடரலாம்.