உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திசை மாறும் நீர் பாசன திட்டங்கள்: ஆளும் கட்சிக்கு நெருக்கடி

திசை மாறும் நீர் பாசன திட்டங்கள்: ஆளும் கட்சிக்கு நெருக்கடி

திருப்பூர்:லோக்சபா தேர்தல் சமயத்தில், நீர்பாசன திட்டம் தொடர்புடைய பிரச்னைகள், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் திசை மாறுகிறது.விரைவில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், அப்பகுதி மக்களின், 60 ஆண்டுகால கனவு திட்டமாகும்.'திட்டப்பணி நிறைவு பெற்றும், துவக்க விழா நடத்தாமல், தி.மு.க., அரசு காலம் தாழ்த்தி வருகிறது' என்பது, அத்திக்கடவு திட்ட போராட்டக் குழுவினர் மற்றும் திட்டம் சார்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் குற்றச்சாட்டு. 'திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும், மார்ச் முதல் தேதி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பி.ஏ.பி., விஸ்வரூபம்

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன கால்வாய்(பி.ஏ.பி.,) திட்டத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளில், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகள், கடைகோடி விவசாயிகள் உள்ள பகுதிகளாக உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, அறிவிக்கப்பட்ட அளவு தண்ணீர் வினியோகிக்கப்படுவதில்லை; 'இடையிடையே பல இடங்களில் நடக்கும் தண்ணீர் திருட்டு தான், இதற்கு காரணம்' என, விவசாய அமைப்பினர் கூறி வருகின்றனர்.'தண்ணீர் திருட்டை தடுத்து, தடையின்றி பாசன நீர் வினியோகிக்க வேண்டும்; சிதிலமடைந்துள்ள பாசன மற்றும் கிளை கால்வாயை பராமரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை கூட போராட்ட அறிவிப்பின் வாயிலாகவே, அங்குள்ள விவசாய அமைப்பினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன், இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்; நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்ட விவசாயிகள், தண்ணீர் திருட்டு தொடர்பான ஆதாரங்களை வாதமாக வைத்து, விடுதலை பெற்றனர். இது, ஆளுங்கட்சிக்கு, பின்னடைவாக பார்க்கப்படுகிறது.தண்ணீர் திருட்டு தடுக்கப்படாததை கண்டித்து, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும், 27ல், பெருந்திரள் முற்றுகை போராட்டத்தை மேற்கொள்ள பி.ஏ.பி, வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கயம் - வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.இந்த விவகாரத்தை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தற்போது கையில் எடுத்துள்ளார். இப்பிரச்னையை சட்டசபை வரை கொண்டு சென்றிருப்பது, கூடுதல் கவனம் பெறுகிறது. எனவே, நீர்ப்பாசன திட்டங்கள், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திசை மாறி வரும் நிலையில், அரசின் செயல்பாடு, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி