உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இணையவழி மோசடியாளர்களிடம் இனி ஏமாறவே கூடாது!

இணையவழி மோசடியாளர்களிடம் இனி ஏமாறவே கூடாது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இணையவழி பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், திருப்பூரைச் சேர்ந்த தொழில்துறையினர் துவங்கி தொழிலாளர், மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, போலி செயலிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. விழிப்புணர்வு இல்லையேல் ஏமாறுவது நிச்சயம்.திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மக்களின் அறியாமை, பேராசை போன்றவற்றை பயன்படுத்தி கும்பல்கள் பணத்தை எளிமையாக மோசடி செய்கின்றனர். போலீஸ் தரப்பில் விழிப்புணர்வு செய்தாலும், படிக்காதவர்களை விட, படித்தவர்களே ஏமாறுவது வேதனையான ஒன்று. அரசு ஊழியர், டாக்டர், ஐ.டி., ஊழியர் என, பல உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் தங்கள் நீண்ட கால சேமிப்பை இழந்து வருகின்றனர். சில மோசடிகளில் வெளியே தெரிந்தால், அசிங்கமாக இருக்கும் என, புகார்கள் வருவதில்லை.சமீப காலமாக, பங்குசந்தை முதலீடு, ஓட்டல் ரீவ்யூ, விளம்பர 'டாஸ்க்'குகளை முடிப்பது போன்ற பாணியில் பணத்தை பறிக்கின்றனர். இதுதவிர போலீஸ் உயரதிகாரிகள் பேசுவதாக கூறி ஏமாற்றுகின்றனர்.

எக்காரணத்தை கொண்டு வங்கி விபரங்களை பகிரக்கூடாது. ஏதாவது சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனடியாக போலீசாரை அணுக வேண்டும். அதிகம் லாபம் வருவது போன்ற விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.மிகுந்த சவால்பங்குசந்தை முதலீடு, கடன் செயலி போன்றவை சீன நாட்டை சேர்ந்தவைகள். இவற்றை வெளிநாடுகளில் இருந்தபடி இயக்குகின்றனர். பணப்பரிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்ள, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளை இயக்கி அதன் மூலம் பணத்தை எடுக்கின்றனர். நம்மிடம் இருந்து எடுக்கப்படும் பணம், உடனடியாக, 'கிரிப்டோ கரன்சி' உள்பட பலவிதங்களில் மாற்றி எடுத்து விடுகின்றனர். இந்த பணத்தை மீட்க மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பகிர்வதோ, யாருக்கும் தெரியப்படுத்துவதோ கூடாது. சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை அணுக வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இணைய வழி மோசடியாளர்களிடம் இனி ஏமாறவே கூடாது என்று மனதில் உறுதியெடுப்பதோடு, விழிப்புணர்வுடன் செயல்படுவதும் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது.

ஏமாறுவோர் அதிகரிப்பு

சமீபத்தில் திருப்பூரில் நடந்த சில சம்பவங்கள்:* திருப்பூரை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் வருவதாக கூறியதை நம்பி, 1.73 கோடி ரூபாயை பறிகொடுத்தார். ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஒருவர், இதே பாணியில், 71 லட்சம் ரூபாயை பறிகொடுத்தார். இரு நாட்களுக்கு முன், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர், 18.35 லட்சம் ரூபாயை 'டிரேடிங்' போலி செயலி மூலம் ஏமாந்தார்.* வாலிபர் ஒருவர் செயலி உதவியுடன் கடன் பெற்றார். திருப்பி செலுத்திய பின், கூடுதலாக பணத்தை கட்ட மிரட்டியுள்ளனர். இதை செலுத்த மறுக்கவே, வாலிபரின் போட்டோ மற்றும் நண்பரின், குழந்தையின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.* திருப்பூரை சேர்ந்த, இரு பெண்களின் சமூக வலைதளப் பக்கத்தை 'ஹேக்' செய்து, அவர்களது பக்கங்களில் ஆபாசமான வீடியோ, போட்டோக்களை பகிர்ந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.* பிரபல தனியார் பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஒருவரின் சமூக வலைதளப் பக்கத்தை பகிர்ந்து, தொடர்பில்லாத தகவல்கள் பகிரப்பட்டு வந்துள்ளன.* சி.பி.ஐ., அதிகாரிகள், உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகள் என கூறி, தவறான விதங்களில் பணத்தை பரிமாற்றம் செய்கிறீர்கள், போதை பொருள் வெளிநாட்டுக்கு கடத்துகின்றனர் போன்ற விதமாக மிரட்டி 8 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.

'லிங்க்' தொட்டால் பணம் போச்சு!

மோசடி ஈடுபடுபவர்கள், 'பிளாக்ராக் கேப்பிடல்' போன்ற பன்னாட்டு முதலீடு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல, சமூக வலைதளங்களில் தொடர்பு எண்களுடன் விளம்பரம் செய்கின்றனர். நம் நாட்டில் செயல்படும் ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டி எனப்படும் பங்கு வர்த்தக முதலீடு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று விளம்பரம் செய்கின்றனர்.பங்கு வர்த்தக முதலீடு, ஆன்லைன் டிரேடிங் தொடர்பாக ஆலோசனை பெற வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழுக்களை ஏற்படுத்தி நம்மை இணைக்க வேண்டுகோள் விடுகின்றனர். அதில், நாம் இணையும் போது, குழுவில் ஏற்கனவே இருப்பவர்கள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த அனுபவங்களை பகிர்கின்றனர். இவர்கள் பங்கு வர்த்தக முதலீட்டாளர்கள் அல்ல, குழுக்களில் உள்ளவர்கள் மோசடி நபர்களே.பங்குகளை கணக்கில் கொள்ள, 'டீமாட் அக்கவுண்ட்'களை துவங்க ஆலோசனை செய்கின்றனர். ஏமாற்றும் வகையில், பல முன்னணி நிறுவனங்களின் பெயர்களை சொல்லி முதலீடு செய்ய வைத்து, நம்மை யேசிக்க விடாமல், பணத்தை பரிமாற்றம் செய்ய வைத்து மோசடி செய்கின்றனர்.உங்கள் சமூக வலைதள பக்கங்களை நம்பியும், தங்களுக்கு வரக்கூடிய குறுந்தகவலில் உள்ள லிங்குகளை நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். மோசடி குறித்து, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது www.cybercrime.gov.inஎனும் தளத்தில் புகார் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !