உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் காக்கும் துப்புரவாளன்

சுற்றுச்சூழல் காக்கும் துப்புரவாளன்

''வீடு சுத்தமானால், வீதி சுத்தமாகும்; வீதி சுத்தமானால், தெரு சுத்தமாகும்; ஒவ்வொரு தெருவும் சுத்தமானால், அந்த ஊர் சுத்தமாகும்; ஒவ்வொரு ஊரும் சுத்தமானால், அந்த மாவட்டமே சுத்தமாகும்...'' சுகாதார கட்டமைப்பின் அடிப்படை இதுதான். இது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு சாலப் பொருந்தும். அதாவது, வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பது, அதை வீடு தேடி வரும் துாய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது; மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது; மக்காத பாலிதீன் உள்ளிட்ட பொருட்களை மறு சுழற்சிக்கு அனுப்பி வைப்பது என, திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பு என்பது, வீடுகளில் இருந்து துவங்க வேண்டும். ஆனால், திருப்பூரில், பெயரளவுக்கு கூட திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் இல்லை. வீதி, தெருவெங்கும் சிதறிக்கிடக்கும் குப்பை, பாறைக்குழி போன்ற திறந்தவெளியில் குவித்து வைக்கப்படும் குப்பையால், நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபடுகிறது. இதனால் ஏற்படப் போகும் விபரீதத்தை உணர்ந்த, துப்புரவாளன் அமைப்பினர், கடந்த, 3 ஆண்டாக பள்ளிகள் தோறும் சென்று, மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவரவர் வீடுகளில் சேகரமாகும் பாலிதீன் கவர், பாட்டில் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, வழங்கும் பட்சத்தில், அதற்கு பதிலாக, நோட்டு, புத்தகம் பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை சேகரித்து வருகின்றனர். 3 ஆண்டில் 30 டன் சேகரிப்பு வீடுகளில் சேகரமாகும் பாலிதீன் கவர், பாட்டில் உள்ள மக்காத பொருட்களை எடுத்து வந்து தரும்படி, பள்ளி நிர்வாகத்தினர் வாயிலாக, பள்ளி, மாணவ, மாணவியருக்கு முன்கூட்டியே தெரிவித்துவிடுவோம். குறிப்பிட்ட நாளில், மாணவ, மாணவியர் சேகரித்து வைத்த பாலிதீன் வகையறாக்களை வாங்கி, மறு சுழற்சிக்கு அனுப்பிவிடுவோம். கடந்த, 3 ஆண்டுகளில், 30 டன் அளவுக்கு மாணவ, மாணவியர் பாலிதீன் கவர் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து தந்துள்ளனர். அவர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது. - பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர், 'துப்புரவாளன்' அமைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை