உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா: தரையில் அமர்ந்து போராடியதால் பரபரப்பு

 மின் வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா: தரையில் அமர்ந்து போராடியதால் பரபரப்பு

உடுமலை: விவசாய மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளைக் கண்டித்து, உடுமலை மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில், நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கியது. இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், விவசாய மின் இணைப்பு வழங்க இழுத்தடிக்கும் அதிகாரிகளைக்கண்டித்து, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறியதாவது: உடுமலை ஏரிப் பாளையத்தைச்சேர்ந்த விவசாயி கண்ணம்மாள், விவசாய மின் இணைப்பு வேண்டி, 2014ல் பதிவு செய்தார். 2023ல் மின் இணைப்பு வழங்க அனுமதிக்கப்பட்டு, அதற்குரிய தொகையும்செலுத்தப்பட்டது. ஆனால், இரு ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதே போல், ஏராளமான விவசாயிகள் பாதித்து வருகின்றனர். சாதாரண விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அலட்சியம் காட்டும் அதிகாரிகள், அரசுக்கு சொந்தமான, 2,700 ஏக்கர் பரப்பளவுள்ள ஜம்புக்கல் மலையை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். அரசுக்குச்சொந்தமான நிலம், ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிலத்தை போலிஆவணங்கள் வாயிலாக அபரிகரித்துள்ளார். பசுமையான மலை அழிக்கப்பட்டுள்ளதோடு, ஆடு, மாடு மேய்க்கக்கூட அனுமதிக்காமல், ஒட்டுமொத்த மலையையும் ஆக்கிரமித்து, பசுமையான மரங்களை அழித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இவ்வாறு, பல பிரச்னைகள்உள்ள நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தன்னிச்சையாக மின் கம்பங்கள் அமைத்து மலைக்கு மேல் உள்ள நபருக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளனர். இது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது; லஞ்சம் கொடுக்கும் நபர்களுக்கு சாதகமாகவும், ஏழை விவசாயிகளுக்கு எதிராகவும் மின்வாரியம் செயல்படுகிறது. இவ்வாறு, விவசாயிகள் ஆக்ரோஷமாக பேசியதோடு, மின் வாரிய அதிகாரிகள் முன், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் வாரிய அதிகாரிகள் மற்றும் உடுமலை இன்ஸ்பெக்டர் ராம் பிரபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். இதில், 10 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என எழுத்து வாயிலாக கடிதம் வழங்கியதோடு, ஜம்புக்கல் மலையில் மின் இணைப்பு வழங்கியது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, மூன்று மணி நேரமாக நடந்த போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை