உண்ணும் உணவுப்பொருட்களைப் பொறுத்தே நம் உடல் நலம் அமைகிறது. இவ்வுலகில், உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் தன் உடலுக்கு எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்று பகுத்துணர்ந்து எதனையும் சாப்பிடுவதில்லை.ஆனால், ஆறறிவுள்ள மனிதனுக்கு பகுத்துணர்வு இயற்கையாக கிடைத்துள்ளது. இதனால், ஒரு மனிதன் உணர்வுகளையும், உயிரின் தீர்க்காயுசையும் அதிகரிக்கவும் செய்யலாம்; அலட்சியமும் செய்யலாம். ஒரு சிலருக்கு நன்றாக இருக்கும் உணவே கூட விஷமாகிவிடுவதுண்டு. ஒவ்வாமை ஏன்?
சமீப காலமாக, தரமற்ற உணவு வகைகளை விற்கும் ஒரு சில ஓட்டல்களில் சாப்பிடும் சிலர் ஒவ்வாமையால் உடல் உபாதைக்கு ஆளாகி வருவதாக தகவல்கள் வருகிறது. அதற்கு முக்கிய காரணம், நமக்கு என்ன பிடிக்கும் என்பதை விட, நம் உடலுக்கு எது ஒத்து கொள்ளும் என தெரிந்து சாப்பிடுவது குறைந்து வருகிறது.குறிப்பாக, தற்போது நவீன உலகில், துரித உணவு வகைகள், எல்லா வயதினரையும், குறிப்பாக குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், துரித உணவு கலாசாரம் நகர்ப்பகுதியில் மட்டுமல்ல... கிராமங்களிலும், இந்த கலாசாரம் வேகமாக பரவி வருகிறது.அதிலும், அதிக நிறமிகளை சேர்த்து, பலமுறை உபயோகித்த எண்ணெயை கொண்டு சமைக்கும் உணவு வகைகள் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். அதிலும், பிரிட்ஜில் வைத்த இறைச்சி, சமையல் பொருட்கள் பெருங்கேடு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுத்தமான சூடான உணவு
சுத்தமான முறையில் வேக வைத்த உணவை அடுத்த, 20 நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டுமென்பதே மருத்துவர்கள் பரிந்துரையாக உள்ளது. அதிலும், உணவு பொருட்களை சூடாகச் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.இவற்றுடன் நல்ல சத்தான உணவுப் பொருட்களை நன்கு சமைத்து சாப்பிட்டு வந்தால், நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். நோய் இல்லாத வாழ்க்கை வாழவே அனைவருக்கும் விருப்பம். அதனால், ரசாயனம் தவிர்த்து, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நம் உடலுக்கு எந்தப் பின் விளைவுகளும் நேராது. ஆரோக்கியமே சிறப்பு
உணவே மருந்து: மருந்தே உணவு என்று சொல்லும்போது, எத்தனை வசதி இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் எப்படி? வாயையும் வயிற்றையும் கட்டுப்படுத்த பழகிக்கொண்டால், உடலும் மனமும் நாம் சொல்வதைக் கேட்கும். அதில்லாமல், சுகாதாரமற்ற சாலையோர உணவுகள் துவங்கி, பார்க்கும் எல்லாவற்றையும், சாப்பிட முயன்றால், உடல் பெருகுவதுடன், ஜீரணக் கோளாறும் ஏற்படும். எனவே, பசிக்கும்போது மட்டும் உணவை உட்கொள்ளும் முறையை கடைபிடித்தால், தேவையின்றி வரும் உடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். அதுவே ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நம்மை இட்டுச் செல்லும்.