உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

திருப்பூர்:கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் கருப்பு சேலை அணிந்து, மடியேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி, மடியேந்தும் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர் மாசிலாமணி, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாநில தலைவர் கலா உட்பட சத்துணவு ஊழியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், எதிர்ப்பை தெரிவிக்கும்வகையில், கண்ணில் கருப்பு துணி கட்டி, கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்; மடியேந்தி, பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர்.சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காத திருப்பூர் மாவட்ட சத்துணவு துறையை கண்டித்தும்; உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 130 க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில், 1,500க்கும் மேற்பட்ட ஊழியர் பணியிடம் காலியாக உள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், சமையலர் மற்றும் உதவியாளர் இருவரும் இல்லாமல், சத்துணவு அமைப்பாளரே சமைக்கும் அவல நிலை நீடிக்கிறது. சமையலர் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு உரிய பண பயன்களை தாமதமின்றி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி