| ADDED : நவ 21, 2025 06:33 AM
அனுப்பர்பாளையம்: -திருப்பூரில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட இடமின்றி மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை ஆங்காங்கே உள்ள காலி இடங்களில் தேக்கி வருகின்றனர். தேக்கி வைக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவரான உமா மகேஸ்வரியின் வார்டான 12ல், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சேகரமாகும் குப்பைகளை 15 வேலம்பாளையம் நெசவாளர் கூட்டுறவு சங்க காலி இடத்தில் தேக்கி வைத்து வருகின்றனர். தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என அருகில் உள்ள அம்மையப்பன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொது மக்கள் அனுப்பர்பாளையம் அரசு பள்ளி அருகில் ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற, மாநகராட்சி முதல் மண்டல சுகாதார ஆய்வாளர்கள் கோகுலநாதன், அருண்பாண்டியன் ஆகியோர், 'துர்நாற்றம் வீசாத வகையில் மண் போட்டு கிருமிநாசினி தெளிக்கப்படும். இனி இங்கு குப்பை கொட்ட மாட்டோம். விரைவில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்படும்,' என உறுதி கூறினர்.