திருப்பூர்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பிறந்த நாளையொட்டி, திருப்பூரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. பிச்சம்பாளையம் ஸ்ரீநகர் உதயம் பிளே ஸ்கூல் வளாகத்தில் நடந்த முகாமில், சிங்காநல்லுார், என்.ஜி., மருத்துவமனை குழுவினர் பரிசோதனை நடத்தினர். முகாமை, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்பாளர் பொங்கி பெருமாள் தலைமை வகித்தார். காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 வரை நடந்த முகாமில், 3000 ரூபாய் மதிப்புள்ள 'எக்கோ', 'அல்ட்ரா சவுண்ட்', இ.சி.ஜி., ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. பொதுநலம், மகளிர் நலம், எலும்பு, இருதயம் சார்ந்த டாக்டர்கள் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர். துவக்க விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டல அமைப்பாளர் குமரவேல், மாவட்ட தலைவர்கள் திருச்செல்வம், பிரசன்னா, மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மொத்தம், 270 பேர், பரிசோதனை செய்து கொண்டு, இலவச மருத்துவ ஆலோசனை பெற்றனர்.